தாய்லாந்துக் குகையில் சிக்கிய 13 பேரும் மீட்பு ! குவியும் வாழ்த்து

0

தாய்லாந்துக் குகையில் சிக்கியிருந்த அனைத்துச் சிறுவர்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த-23 ஆம் திகதி தாய்லாந்தின் மேற்குப் பகுதியிலுள்ள தாம் லுவாங் மலைப்பகுதிக்கு கால்பந்து பயிற்சி பெறும் 12 சிறுவர்கள் கொண்ட குழு பயிற்சியாளருடன் டிரெக்கிங் சென்றிருந்தனர்.

பருவமழை தீவிரமடைந்தமையால் தாம் லுவாங் குகைக்குள் குறித்த 13 பேரும் சிக்கிக்கொண்டனர். குகைக்குள் வெள்ள நீர் சூழ்ந்தமையால் குகையினுள்ளே சிக்கிக்கொண்ட 13 பேரால் வெளியே வரமுடியவில்லை.

இது தொடர்பாகத் தாய்லாந்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாயமான 13 பேரையும் மீட்கும் பணி கடந்த இருவாரங்களாகத் தீவிரமாக இடம்பெற்று வந்தது.

தாய்லாந்து நாட்டு இராணுவத்தினருடன் அமெரிக்கா, இங்கிலாந்து,அவுஸ்திரேலியா உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த இரு வாரங்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணி நடவடிக்கைகளுக்கமைய கடந்த திங்கட்கிழமை(09) வரை எட்டுச் சிறுவர்கள் மீடப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்றைய தினம் குகைக்குள் சிக்கியிருந்த மூன்று சிறுவர்கள் உட்படப் பயிற்சியாளரும் மீட்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்துக் குகைக்குள் சிக்கியிருந்த அனைவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்ட நிலையில் சிறுவர்கள் அனைவரும் மனோதிடத்துடனும், உடல் ஆரோக்கியத்திடனும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சிக்கிகொண்ட கால்பந்து வீரர்கள் அனைவரும் 11 வயது முதல் 16 வயதுடைய சிறுவர்களாகக் காணப்படுகின்றார்கள்.

சுமார் பத்துக் கிலோமீற்றர் நீளம் கொண்ட இந்தக் குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்ட நிலையில் தாய்லாந்து சியாங் ராய் மாகாணத்திலுள்ள தாம் லுவாங் குகைக்கு தாய்லாந்து அரசால் தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மூன்று தினங்களாகச் சிறுவர்களை மீட்கும் பணியில் அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய மீட்புக் குழுவினருக்குப் பல்வேறு மட்டங்களிலிருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன..

Leave A Reply

Your email address will not be published.