புலிகளின் அடி எப்படி இருக்குமென ஒரு நாள் சிங்கள அரசுக்குப் புரியும்!

0

அண்மையில் இலங்கையில் விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் செய்யப்படுவதாக இலங்கை அரசால் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது. ஒட்டுசுட்டான் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று சென்றதாம். அதை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் விடுதலைப் புலிகளின் சீருடைகள், கொடிகள் காணப்பட்டதாம். அத்துடன் கிளைமோர் மற்றும் துப்பாக்கிகள், துப்பாக்கிச் சனங்கள் என்பன காணப்பட்டதாம். அவர்களில் ஒருவரை கைது செய்தார்களாம் இலங்கை காவல்துறை. மற்றையவர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்களாம். எப்படியிருக்கிறது இந்தக் கதை? மைத்திரி – ரணில் என்ற பெரும் புனைகதை எழுத்தாளர்களால் எழுதப்பட்ட கதை.

ஒரு விடுதலைப் போராட்டத்தை இப்படி எல்லாம் கற்பனை இவர்களால் எவ்வாறு முடிகிறது? ஒரே ஒரு துப்பாக்கியுடன் தொடங்கிய விடுதலைப் புலிகளின் போராட்டம் பற்றிய ஆரம்ப கால கதைகள் அவ்வளவு தனித்துவமாக அமையும். ஆரம்ப காலத்தில் நடந்த சண்டைகள், இயக்கச் செயற்பாடுகள் காவியங்களில் வரும் வீர யுக நிகழ்வுக் கதைகள் போல் இருக்கும். அப்படி ஒரு செழுமையான வரலாற்றைக் கொண்ட இயக்கத்தை சிங்கள அரசினால் கற்பனையால்கூட புரிந்து கொள்ள முடியாது என்பதையே ஒட்டுசுட்டான் உணர்த்துகிறது.

ஒட்டுசுட்டானில் மீண்டும் புலிகள் என்ற நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது, ஆனால் இது நன்கு சித்திரிக்கப்பட்ட நாடகம் என்பதை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்சவின் வலதுகரங்களின் ஒன்றான ரியர் அட்மிரல் சரத்வீரசேகர அம்பலப்படுத்தியுள்ளார். அவர் கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்து கூறிய கருத்துக்கள் இலங்கை அரசின் முகத்தில் கரியை அப்பியுள்ளன. ஈழத் தமிழர்களை பாதுகாக்கவோ, ஈழத் தமிழர்களுக்கு இதில் தொடர்பில்லை என்று சொல்லவோ அவர் இவைகளை அம்பலப்படுத்தவில்லை. சிங்களப் பேரினவாததத்தையும் சிங்கள அரசையும் இராணுவத்தையும் காப்பாற்றவே இப்படி பேசியிருக்கிறார்.

அவர் பேசியது இதுதான். சிங்கள அரசின் இராணுவப் புலனாய்வுக்கு இன்றைய அரச துரோகம் இழைத்துவிட்டது என்பதே ரியர் அட்மிரல் சரத்வீரசேகரவின் கவலை. ஒட்டுசுட்டான் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் முன்னர் பொட்டம்மானின் உளவுப்பிரிவில் பணியாற்றியவர் என்றும் அவர் உண்மையில் சிறிலங்கா இராணுவ உளவாளி எனவும் முன்னர் புலிகள் வைத்திருந்த தாக்குதல் திட்டங்களை அறிந்து கொள்வதற்காக இராணுவம் இவருக்கு அதிக பணத்தைவழங்கி உத்தியோகம் அளித்து உளவுத்தகவல்களை பெற்றதாகவும் இவ்வாறான உளவாளிகள் இன்னமும் முன்னாள் போராளிகளிடையே கலந்திருப்பதால் அவசரப்பட்டு அவ்வாறான ஒருவரை கைது செய்தமை அரசியல் தலையீட்டுடன் சிறிலங்கா புலனாய்வுத்துறைக்கு செய்யபட்ட ஒரு பெரிய துரோகம் எனவும், அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார். உண்மையில் நடந்தது இதுதான்.

ஆனால் இதற்குள் ஒட்டுசுட்டான் சம்பவத்தில் திறமையாக செயற்பட்ட காவல்துறைக்கு விருது வழங்கும் நிகழ்வுவேறு இடம்பெற்றுள்ளது. இலங்கை அரசாங்கம் தான் முன்னெடுத்த நாடகத்திற்கு வழங்கிய விருதே இதுவாகும். இலங்கை அரசே இந்த நாடகத்தை முன்னெடுத்திருக்கிறது என்பதற்கு அட்மிரல் சரத் வீரசேகரவே சாட்சி. கடந்த ஆட்சியில் மகிந்த ராஜபக்சவின் இராணுவ உளவாளியாக இயங்கியவர்களை இந்த அரசு கைது செய்திருக்கிறது. மகிந்த அணியின் தூண்டுதலில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தால் இன்றைய அரசு மகிந்த அணிக்கும் ஒட்டுசுட்டான் சம்பவத்திற்கும் உள்ள தொடர்பை அம்பலப்படுத்தியிருக்கும். ஆனால் நடந்தது வேறு. அதனாலேயே ரியர் அட்மிரல் சரத்வீரசேகர உண்மையை அம்பலப்படுத்தியுள்ளார்.

மைத்திரி அரசாங்கம், இன்றைய உலக அரசியல் சூழ்நிலைகளில் ஒரு புலி நாடகத்தை நடத்தியமை பற்றி கடந்த ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம். சுவிஸ் நாட்டில் புலிகள்மீதான தடை நீக்கம், அமெரிக்காவின் அதிருப்திகள், ஐ.நாவின் விசனம் என்பன காரணமாக மைத்திரிபால – ரணில் புலி நாடகத்தை காண்பித்துள்ளனர். இது ஒரு நாடகம் என்பது ஈழத் தமிழ் மக்களுக்குத் தெரியும். ஆனால் இது எதற்கான? எத்தகைய நாடகம்? என்பதை சிங்கள மக்களுக்கு ரியர் அட்மிரல் சரத்வீரசேகர தெளிவுபடுத்தியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன – ரணில் அரசாங்கம் மகிந்த அரசாங்கத்தைவிட எந்த வித்திலும் விஞ்சியதல்ல. குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை வஞ்சிப்பதிலும் அவர்களை பதற்றம் மிகுந்த வாழ்வுக்குள் தள்ளுவதையும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆயுதங்களை திணிப்பதையும் தமிழ் மக்களின் உரிமைகளை இப்படி செய்து மறுப்பதிலும் ராஜபக்சவை விஞ்சிய நிலையிலேயே செயற்படுகின்றது இன்றைய அரசு. மகிந்தவைப்போலவே கே.பியையும் கருணாவையும் சுதந்திரமாக நடமாட விட்டுக் கொண்டு அப்பாவி தமிழ் இளைஞர்களை சிறையில் அடைத்து வஞ்சிக்கிறது இன்றைய அரசு. அப்படியே எல்லாமும் நடக்கிறது.

சிங்கள அரசு இவ்வாறு செய்து எமது போராளிகளுக்கும் எமது மக்களுக்கும் எதிராக செய்யும் சூழ்ச்சிகள் சதிகளுக்கு எதிராக தமிழ் தலைவர்கள் பேச வேண்டும். ஆனால் சிங்கள அரசின் கால்களை நக்கிவிட்டு அவர்கள் மௌனித்துக் கிடக்கிறார்கள். யார் புலிகளை நெஞ்சில் சுமப்பவர்கள் என்ற தேர்தல் பிரசார போட்டியில் வாய் கிழிய கத்தியவர்கள் இப்போது பேச வேண்டிய நேரத்தில் மௌனமாக இருப்பது தமிழ் மக்களுக்கும் அவர்களின் போராட்டத்திற்கும் செய்யும் துரோகம். உண்மையை பேச மறுத்த இவர்களுக்கு, எம் சத்தியப் போராட்டத்தில் சரியாக நடக்க இவர்களை தமிழ் மக்கள் தோல்வியடைய செய்யும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

மைத்திரி – ரணில் என்ற சிங்கள எதிரிகளால் எமக்கு எதிராக தீட்டப்பட்ட சூழ்ச்சி மகிந்த என்ற சிங்கள எதிரி வழியாக அம்பலமாகியுள்ளது. 2009இல் தலைவர் பிரபாகரனின் கட்டளையுடன் மெளினிக்கப்பட்ட ஆயுதங்களை மீண்டும் தூக்குவதா இல்லையா என்பதை அவர் அல்லது அவரால் அறிவிக்கப்பட்ட அடுத்த தலைமையின் கட்டளையே தீர்மானிக்கும்.

சிங்கள அரசு இவ்வாறு நாடகங்களை போட்டு விளையாடுகிறது.பொய்யான புலிகளை வைத்து நாடகம் ஆடும் சிங்கள அரசுக்கு உண்மையில் ஒரு நாள் புலிகளை சந்திக்கும்போது உண்மையான புலிகள் யார்? அவர்களின் அடி என்னவென்று புரியத்தான் போகிறது.

ஆசிரியர்.
ஈழம்நியூஸ்.
01.07.2018

Leave A Reply

Your email address will not be published.