இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்த மலேசியாவின் தமிழ் அரசியல்வாதி ஒருவர் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பீ. ராமசாமிக்கு எதிராகவே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதை அடுத்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய, மலேசிய பொலிஸ் மா அதிபர் மொஹமட் பௌசி ஆருண், பேராசிரியர் ராமசாமிக்கு எதிராக பல்வேறு நபர்கள் 53 முறைப்பாடுகளை செய்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பேராசிரியர் ராமசாமி, தான் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் அல்ல எனவும் மலேசிய பிரஜை எனவும் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் ராமசாமி, இந்தோனேசியா – ஆச்சே மாநில இனப்பிரச்சினையில் தலையீடுகளை மேற்கொண்டிருந்ததுடன் 2006 ஆம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளை பேணி வந்துள்ளார்.
நோர்வே அரசாங்கம், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண தலையீடுகளை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் தாம், விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டதாக பேராசிரியர் ராமசாமி ஏற்றுக்கொண்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் சின்னமாக கருதப்படும் கலஸ்னிபோஃப் துப்பாக்கிக்கு போராசிரியர் ராமசாமி மரியாதை செலுத்தும் புகைப்படம் ஒன்று வெளியானத்தை அடுத்தே அவர் குறித்து கவனம் செலுத்தப்படுவது அதிகரித்தது.
அதேவேளை தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அரசியல் தலைவரான வைகோ, மலேசியாவுக்கு விஜயம் செய்ய, பேராசிரியர் ராமசாமியே அனுசரணை வழங்கியிருந்தார்.
பேராசிரியர் ராமசாமியின் புதல்வரின் திருமண நிகழ்வில் கலந்துகொள்ளவே வைகோ, மலேசியா சென்றிருந்தார்.
எனினும் கடந்த வருடம் ஜூன் மாதம் 9 ஆம் திகதி கோலாலம்பூர் விமான நிலையத்தை சென்றடைந்த வைகோ, மலேசியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மலேசியாவுக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் வைகோ உள்ளடக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.