புலி பற்றிப் பேசியதற்காக பழி வாங்கும் பேரினவாதம்! ஒரு சிங்கள பெண் அரசியல்வாதிக்கு இப்படி செய்வீர்களா?

0

வடக்கில் நடைபெறும் வன்முறைகளுக்கு முடிவு கட்டவும் வடக்கு கிழக்கில் ஈழத் தமிழர்கள் சுதந்திரமாக வாழவும் புலிகளின் கை ஓங்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா மகளீர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியிருந்தார். அத்துடன் 2009இற்கு முன்னரான காலத்தில் இத்தகைய சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு பேசியிருந்தமை ஸ்ரீலங்கா அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.

விஜயகலா மகேஸ்வரன் அவ்வப்போது தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்காக விடுதலைப் புலிகளையும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை குறித்தும் பேசுவார். அதைப்போலவே இம்முறையும் பேசியுள்ளார். அவர் சிங்கள அரசின் அமைச்சராக இருந்து கொண்டு இவைகளை பேசுவது வேடிக்கையான விடயம்தான். எனினும் இம்முறை அவர் விடுதலைப் புலிகள் மீள உருவாக வேண்டும் என்று தெரிந்தோ, தெரியாமலோ பேசிய விடயம் சிங்கள அரசையும் சிங்கள பேரினவாதிகளையும் ஆட்டம் காண வைத்துள்ளது.

சிங்கள அரசில் அமைச்சராக இருக்கும் ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது சிங்கள அரசுக்கு பேரதிர்ச்சியான விடயமாக உள்ளதுடன் உலகம் முழுவதும் இந்த பேச்சு கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் சிங்கள அரசும் சிங்களப் பேரினவாதிகளும் அவருக்கு எதிராக பெரும் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என்று சிலர் பேசத் தொடங்கியுள்ளனர். அத்துடன் அவர்மீது விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று சிங்கள அரசு சார்பிலும் ஆளும் கட்சி சார்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநயக்கா மற்றுமொரு அநீதியை புரிந்துள்ளார். ஊடக சந்திப்பு ஒன்றை நடாத்திக் கொண்டு அமைச்சர் விஜயகலாவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இதன்போது வடக்கின்நிலமையையும் விஜயகலா விளங்கப்படுத்தியுள்ளார். அத்துடன் சூழ்நிலை காரணமாக பேசுவதறியாமல் பேசியதாகவும் கூறினார். ஆனாலும் இவைகளை விஜயகலாவின் அனுமதி பெறாமல் ஊடகங்களில் காட்டுவது அநாகரிகமானது. இதனையோ ஒரு சிங்களப் பெண் அரசியல் வாதியுடன் பேசி ஊடகங்களுக்கு ரஞசன் ராமநசாயக்க காண்பிப்பாரா? தமிழ் பெண் அரசியல்வாதி என்ற இளக்காரமே இற்கு காரணம்.

விஜயகலா செய்தது சரி பிழை என்பதற்கு அப்பால், தமிழ் மக்களால் என்றால், தமிழ் அரசியல்வாதிகள் என்றால் சிங்கள அரசும் சிங்களப் பேரினவாதிகளும் எப்படி நடந்து கொள்ளுவார்கள் என்பதை விஜயகலா சர்ச்சை உணர்த்தியுள்ளது. முற்போக்கு வேடத்தையும் நல்லாட்சி வேடத்தையும் இன்றைய சிங்கள அரசு இந்த நிகழ்வுகளின் வாயிலாக அம்பலப்படுத்தியுள்ளது. எத்தனை நூறு ஆண்டுகள் போனாலும் சிங்கள அரசு திருந்தாது என்பதையும் இந்த களேபரங்கள் தெளிவாக உணர்த்துகின்றது.

புலி பற்றிப் பேசியதற்கே சிங்கள அரசும் சிங்களப் பேரினவாதிகளும் இப்படிக் களேபரம் அடைந்துவிட்டார்களே? வழமையாக தமிழ் பத்திரிகையாளர்களும் தமிழ் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் எழுத்தாளர்களும் கூறி வந்த விடயத்தைத்தான் விஜயகலா பேசியிருக்கிறார். என்ன சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றிலிருந்து பேசியிருக்கிறார். ஏன் சில சிங்கள மக்களே இதனை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். வரலாறு முழுதும் புலி பற்றிய பேச்சு உங்களை வந்து தாக்கிக்கொண்டே இருக்கும்.

ஆசிரியர்.
04.07.2018

Leave A Reply

Your email address will not be published.