போதைப்பொருட்களை கட்டுப்படுத்த கோட்டைக்குள் இராணுவம் இருக்கவேண்டுமாம்

0

நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற போதைப் பொருட்களை கட்டுப்படுத்த இராணுவம் யாழ். கோட்டைக்குள் இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே.

வடமாகாண ஆளுநரின் யாழ். அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது, கோட்டைக்குள் இராணுவம் அனுமதிக்கப்பட்டமை தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆளுநர்,

‘யாழ். குடாநாட்டினூடாகவே இலங்கைக்குள் அதிகளவான போதைவஸ்து கடத்தல்கள் இடம்பெறுகின்றன. இவை தவிர பல்வேறு இடங்களில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இராமேஸ்வரத்திலும் பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன. இவற்றை கட்டுப்படுத்த வேண்டுமானால் இராணுவம் கோட்டைக்குள் இருக்க வேண்டிய தேவையுள்ளது. விடுதலைப் புலிகளாலேயே வடக்குக்கு இராணுவம் வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

யாழ்.கோட்டையில் ஆரம்பத்தில் போர்த்துக்கேயரும் பின்னர் டச்சுக்காரர்களும் பின்னர் ஆங்கிலேயரும் இருந்தனர். பின்னர் அவர்களைத் தொடர்ந்து இராணுவமும் பின்னர் விடுதலைப் புலிகளும் இருந்தனர். இவ்வாறான நிலையில் தற்போது அங்கு இராணுவம் இருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் குடாநாட்டுக்குள் போதைவஸ்து கடத்தல் அதிகரித்துள்ளது. இப் போதைவஸ்து நாட்டுக்குள் கடல் வழியாகவே 80 வீதம் வருகின்றது. 10 வீதம் விமானம் மூலமும், 10வீதம் துறைமுகங்கள் ஊடாகவுமே நாட்டுக்குள் வருகின்றன. இதிலும் குடாநாட்டினூடாகவே இலங்கைக்குள் அதிகளவான போதைவஸ்து கடத்தல்கள் இடம்பெறுகின்றன என்றார்.

Leave A Reply

Your email address will not be published.