யானைகளைப்போல் எலிகளைக் கொல்ல முடியாது! மனுஷ்யபுத்திரன் கவிதை

0

யானைகள் எவ்வளவு பெரியவை
அவை மிக அதிகமாக உண்கின்றன
அவை நம் வயல்களுக்குள் புகுந்து
சூறையாடுகின்றன
நமக்கு யானைகளைக் கண்டால்
அச்சமாக இருக்கிறது
ஆனால் நாம் யானைகளை வெறுப்பதில்லை.

எலிகள் எவ்வளவு சிறியவை
அவை குறைவாக உண்கின்றன
அவை நம் இருப்பிடங்களுக்குள் புகுந்து
நம் தானியங்களை, பழங்களைக் கொறிக்கின்றன
எலிகளிடம் நமக்கு பயமில்லை
ஆனால் நாம் எலிகளை
மனதார வெறுக்கிறோம்.

யானைகள் வெளிப்படையாக நடந்துகொள்கின்றன
அவற்றால் தம்மை ஒளித்துக்கொள்ள முடியாது
அவை நம்மை நேரடியாகத் தாக்குகின்றன
நம்மால் அவற்றைச் சகிக்க முடியும்.

எலிகள் நம்மை ஏமாற்றுகின்றன
நம்மை முட்டாளாக்குகின்றன
நாம் தூங்குவதற்காகக் காத்திருக்கின்றன
நம்மைப்போலவே அவை
சாதுர்யமாக நடந்துகொள்கின்றன
அது நம்மைப் பாதுகாப்பற்றவர்களாக்குகிறது
நம்மால் எலிகளை சகித்துக் கொள்ள முடியாது.

முக்கியமாக
யானைகளைக் கொல்வதுபோல
அவ்வளவு சுலபமாக
நம்மால் எலிகளைக் கொல்ல முடியாது.

– மனுஷ்ய புத்திரன்
நூறு பெளர்ணமிகளின் வெளிச்சம்/ உயிர்மை

Leave A Reply

Your email address will not be published.