‘யாழ்ப்பாண மக்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை’- தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த கூற்று!!

0

‘யாழ்பாணத் தமிழர்களைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. அவர்கள் நசுக்கப்படுவது பற்றிய செய்திகளிலும் எனக்கு கவலை இல்லை. இங்கு தென்பகுதியில் உள்ள சிங்கள் மக்களைப் பற்றித்தான் எனது அக்கறை இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் கஸ்டப்படுவதை இட்டு சிங்கள மக்கள் மகிழ்கின்றார்கள் என்றால், சிங்கள மக்களை மகிழ்விக்கின்ற காரியத்தைத்தான் நான் செய்வேன் என்று அப்போதைய சிறிலங்கா அரச தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தெரிவித்திருந்த கருத்து தமிழ் மக்கள் மனங்களை மிகவும் புன்படுத்தியிருந்தது.

1983ம் ஆண்டு ஜுலை மாதம் 11ம் திகதி Daily Telegraph பத்திரிகைக்கு வழங்கியிருந்த செவ்வியிலேயே ஜே.ஆர். இவ்வாறு கூறியிருந்தார்.

தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரச தலைவர் ஜே.ஆரும் அவர் தலைமை வகித்த ஐ.தே.கட்சி அரசாங்கமும், அரச இயந்திரமும் எந்த அளவிற்கு காழ்புணர்வுடன் அந்தக் காலத்தில் இருந்தது என்பதற்கு ஜே.ஆரின் அந்தச் செவ்வி ஒரு சிறந்த உதாரணம்.

இந்தப் பின்னணியில்தான் ஜுpலை 23ம் திகதி யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பிரதேசத்தில் வைத்து சிறிலங்கா ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

‘4-4 பிராவோ’ என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் வீதி உலா அணி மீதுஇ யாழ்ப்பாணம் திருநெல்வேலி பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அந்த அதிரடித் தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட மொத்தம் 13 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள்.

விடுதலைப் புலிகளின் அந்தத் தாக்குதலை தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைக்கான சந்தர்ப்பமாகவும், ஆயுதமாகவும் பயன்படுத்த நினைத்தது ஜே.ஆர். அரசு.

தமது நினைப்பினைச் செயற்படுத்தி அதில் வெற்றியும் கண்டது.

83 இன அழிப்பிற்கான காய் நகர்த்தல்களில் ஜே.ஆரும் அவரது அரசும் எப்படி கச்சிதமாக காய்களை நகர்த்தியது என்பது பற்றித்தான் இங்கு நாம் சுருக்கமாகப் பார்க்கப் போகின்றோம்.

தென் இலங்கையில் தமிழர் மீதான இன அழிப்பை திட்டமிட்ட சிறிலங்கா அரச தலைமை, திருநெல்வேலியில் விடுதலைப்புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட படைவீரர்களின் உடல்களை, கழுவிச் சுத்தம் செய்யாமல், பதப்படுத்தாமல், இரத்தம் வடிந்த காயங்களுடனேயே கொழும்புக்கு அனுப்பும்படி, இராணுவத்தளபதி திஸ்ஸ வீரதுங்கவுக்கு உத்தரவு பிறப்பித்தது.

கொழும்பு கனத்தை மாயானத்தில் இராணுவ மரியாதையுடன் கொல்லப்பட்ட படைவீரர்களின் உடல்கள் தகனம்செய்யப்படுவதாக அறிவித்து, பெரும் அளவிலான மக்களை கனத்தை மாயானத்தில் திரட்டடியது அரசாங்கம்.

அதேவேளை மத்தரமுல்லை சேரிகளில் இருந்து சுமார் 3000 அடியாட்களையும் அங்கு வரவளைத்தார்கள் ஐ.தே.கட்சி அரசியல் பிரமுகர்கள்.
இராணுவ மரியாதையுடன் இறுதி மரியாதை இடம்பெறப்போவதாக அறிவித்து பெருமளவு மக்களைத் திரட்டி அவர்களை ஒரு கொதிநிலையில் வைத்துக்கொண்டு, அதேவேளை இராணுவத்தினரின் உடல்களை இரகசியமாக அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவு பிறப்பித்தார் ஜெயவர்த்தன.

சிங்கள மக்களை கொதிநிலையின் உச்சிக்குக்கொண்டு சென்று, மிக லாவகமாக அந்தக் கொதிநிலையை தமிழ் மக்கள் மீது திருப்புவதில் ஐ.தே.கட்சி அரசாங்கம் வெற்றி பெற்றது.

தமிழ் மக்களுக்கு எதிரான அந்தக் கொதி நிலை நாடு முழுவதும் பரவுவதையும் கவனமாகப் பார்த்துக்கொண்டார்கள்.
அடுத்து வந்த நாட்களில்….

தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

தமிழர்கள் நிர்வானமாக்கப்பட்டு சித்திவதை செய்யப்பட்டார்கள்.

சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளும் சிறிலங்கா அரச இயந்திரத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

திட்மிட்ட இன அழிப்பால் அனைத்தையும் இழந்து, அநாதரவாக, நடுங்கிக்கொண்டு நின்ற தமிழ் மக்களைப் பார்த்து ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூறிய ஒரு வரலாற்று வார்த்தை தமிழ் மக்கள் மனங்களில் நீங்காத வடுவை ஏற்படுத்தியிருந்தது.

‘போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம்..’

கிட்டத்தட்ட ஒரு போர்ப் பிரகடனம் போன்று தமிழ் மக்களை நோக்கி அன்று ஜே.ஆர். கூறிய அந்த வார்த்தைகள்தான், எதனை இழந்தாவது தமக்கென்று ஒரு நாட்டை அமைத்துக்கொள்ளவேண்டும் என்று ஒவ்வொரு தமிழனையும் நினைக்கத் தூண்டிய வார்த்தகள்.

சாரை சாரையாக ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை போராட்டத்தை நோக்கிப் பயணிக்க வைத்த வார்த்தைகள்தான் – ஜே.ஆரின் அந்த வரலாற்று அறைகூவல்.

Leave A Reply

Your email address will not be published.