ராஜபக்ஸர்களுக்கு தலைவலி ஆரம்பம்

0

ஊழல், மோசடி வழக்குகளை துரிதமாக விசாரிக்க ஏற்படுத்தப்பட உள்ள விசேட மேல் நீதிமன்றத்தில் முதலாவது வழக்குகளாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் ஊழியர்கள் குழுவின் தலைமை அதிகாரி காமினி செனரத் ஆகியோரின் இரண்டு வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலர் இணைந்து அண்மையில் நடத்திய கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளுக்கான ஆவணங்கள் சட்டமா அதிபரினால் தயாரிக்கப்பட்டு, பிரதம நீதியரசர் ஊடாக விசேட மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.

விசேட நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டிய வழக்குகள் சம்பந்தமாக நீதியமைச்சில் கடந்த வாரம் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் விசேட மேல் நீதிமன்றத்திற்கு எந்த வழக்குகளை அனுப்பி வைப்பது என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இதனடிப்படையில், கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான, டி.ஏ.ராஜபக்ச நினைவு அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க தாழ்நிலைங்களை அபிவிருத்தி செய்யும் சபைக்கு சொந்தமான 90 மில்லியன் ரூபாய் பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பான வழக்கு முதலில் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.

அடுத்த வழக்காக கொழும்பில் நிர்மாணிக்க உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு ஒதுக்கப்பட்ட 18.9 பில்லியன் பணத்தில் 4 பில்லியன் பணத்தை அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல் திட்டத்திற்கு பயன்படுத்தியமை தொடர்பில் காமினி செனரத்திற்கு எதிரான வழங்கு விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வழக்குகள் தினமும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதுடன் இரண்டு மூன்று நாட்களில் விசாரணைகள் நிறைவு செய்யப்படவுள்ளதாகவும் பேசப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.