யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேகத்தின் போது மின்விளக்குகளால் தமிழீழத்திற்கான வரைப்படம் அலங்கரிக்கப்பட்டிருந்தமை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் விசனம் வெளியிட்டுள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
கும்பாபிஷேகத்தின் போது தமிழீழத்திற்கான வரைப்படம் ஏந்திச் செல்லப்பட்டமையானது நாட்டில் நெருக்கடியான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்.
2018 ஆம் ஆண்டின் ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. அதில் முதல் ஐந்து மாதங்களில் கொள்ளைச் சம்வபங்கள் 1260, பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் 734, கொலைச் சம்பவங்கள் 214ஆக பதிவாகியுள்ளன.
இவ்வாறான நிலையில் தற்போது வடக்கில் ஒட்டுசுட்டான் பகுதியில் முச்சக்கர வண்டியில் ஆயுதங்கள் சிக்கியுள்ளன. மேலும் கோவில் கும்பாபிஷேக ஊர்வலத்தின் போது தமிழீழத்திற்கான வரைப்படம் ஏந்திச் செல்லப்படுகின்றது. இவ்வாறான நிலைமைகள் நாட்டில் புலிகள் நெருக்கடியான சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்றார்.
இதேவேளை ஓட்டுசுட்டானில் பிடிபட்டவர் இராணுவ உளவாளி என மகிந்த அணியை சேர்ந்தவரே தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.