விஜய் சேதுபதி கருத்துக்கு எதிர்ப்பு – பசுமைத் தாயகம் அறிக்கை

0

சிகரெட் நிறுவனங்களுக்கு எதிராக குரல் கொடுங்கள் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியதற்கு எதிராக பசுமைத் தாயகம் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. #PasumaiThaayagam #VijaySethupathi

விஜய் சேதுபதி கருத்துக்கு எதிர்ப்பு – பசுமைத் தாயகம் அறிக்கை
சென்னை:

நடிகர் விஜய் சேதுபதி “சினிமாவில் புகை பிடிக்கும் காட்சியில் நடிப்பது தொடர்பாக நடிகர்களை எதற்காக வம்புக்கு இழுக்கிறீர்கள்? என்றும் அதற்குப் பதிலாக சிகரெட் தயாரிக்கும் நிறுவனத்துக்கு எதிராகக் குரல் கொடுங்கள்’’ என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருந்தார்.

இது தொடர்பாக பசுமைத் தாயகம் அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “பசுமைத் தாயகம் அமைப்பு புகையிலைப் பொருட்களை எல்லா வழிகளிலும் ஒழித்துக் கட்டக் கடந்த இருபது ஆண்டுகளாகப் போராடி வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்தால் முன்வைக்கப்பட்ட புகையிலை ஒழிப்பு திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தியவர் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

“சிகரெட் தயாரிக்கும் நிறுவனத்துக்கு எதிராகக் குரல் கொடுங்கள்” என்கிறார் விஜய் சேதுபதி. அதை பசுமைத் தாயகம் அமைப்பு செய்துகொண்டுதான் இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி பள்ளிகளில் தூய்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 2012 ஆம் ஆண்டில் நடத்திய போது, அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அப்போது அதனை எதிர்த்து போராட்டம் நடத்தியது பசுமைத் தாயகம். இதனைக் கண்டித்து அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டார். இந்தப் போராட்டத்தை தொடர்ந்து,” தமிழ்நாட்டில் புகையிலை நிறுவனங்கள் எதுவும் எந்தவொரு நிகழ்ச்சிக்காகவும் பள்ளிகளில் நுழையக் கூடாது. அந்த நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் பள்ளி குழந்தைகள் பங்கேற்க கூடாது” என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு புகையிலை பழக்கம் அதிகரிக்கும் என 2005 ஆம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் கணித்தது. ஆனால், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி மத்திய சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், இந்தியாவில் புகைபிடிப்போர் அளவு 9 சதவிகிதம் குறைந்துள்ளது.

பொது இடங்களில் புகைக்க தடை, பள்ளிகளுக்கு அருகில் புகையிலை பொருட்கள் விற்க தடை, புகையிலை விளம்பரங்களுக்குத் தடை, புகையிலை பொருள் விற்கும் கடைகளில் விளம்பரங்களுக்குத் தடை, உள்ளிட்ட நடவடிக்கைகள் அவரது முயற்சியால் விளைந்த நன்மைகள் ஆகும். அவற்றில் ஒரு பகுதியாக சினிமாவில் எச்சரிக்கை படம், எச்சரிக்கை விளம்பரம் உள்ளிட்டவற்றையும் அவர் சட்டப்பூர்வமாக செயல்படுத்தியுள்ளார். இந்த சாதனைகளை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை; கொச்சைப்படுத்தாமல் இருக்க நடிகர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்’’.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PasumaiThaayagam #VijaySethupathi

Leave A Reply

Your email address will not be published.