வீதியில் கிடைத்த அதிஷ்டம்! மல்லாவி மாணவிகளின் நற்செயல்

0

யாழ்ப்பாணம் – மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகளின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவிகள் வீதியில் கிடந்த பெறுமதியான தங்க நகையை கண்டெடுத்து அதை பொறுப்புடன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகள் தனியார் வகுப்புக்குச் சென்று விட்டு, வீடு திரும்பும் போது, மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பெறுமதியான தங்க ஆபரணம் வீதியில் கிடப்பதை அவதானித்துள்ளனர்.

இந்த தங்க ஆபரணத்தை எடுத்த மாணவிகள் பொறுப்புடன் செயல்பட்டு உடனடியாக அருகில் இருந்த மல்லாவி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த தங்க நகையை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தங்க ஆபரணம் மல்லாவி பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் உரிமையாளர்கள் தகுந்த ஆதாரத்தை காட்டி பெற்றுக்கொள்ளுமாறும் மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வீதியில் கைவிடப்பட்டு இருக்கும் பொருட்களையோ, யாரேனும் தவறுதலாக விட்டுச் சென்ற பொருட்களையோ தமது உடைமையாக்கிக் கொள்ளும் இக்காலத்தில் இந்த மாணவிகளின் செயற்பாடு பாராட்டுக்குரியதாகவே காணப்படுகின்றது.

அதிலும் அண்மைக்காலங்களாக யாழ்ப்பாணத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறும் நிலையில், வீதியில் கிடந்த தங்க நகையை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த மாணவிகளின் செயலுக்கு பொலிஸாரும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.