பேரறிவாளனை விடுவிக்க எங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை- ராகுல் கூறியதாக தகவல்

0

பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பேரறிவாளனை விடுவிக்க எங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை- ராகுல் கூறியதாக தகவல்
சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் பேரறிவாளனும் ஒருவராவார்.

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த இவர் மீது சி.பி.ஐ. முக்கியமான குற்றச்சாட்டுகளை சுமத்தியது.

ராஜீவ்காந்தியை படுகொலை செய்வதற்கு, தற்கொலைப் படையினர் பயன்படுத்திய வெடிகுண்டை இயக்குவதற்கான 2 பேட்டரிகளை பேரறிவாளன்தான் வாங்கிக் கொடுத்தார் என்று கூறி போலீசார் அவரை 1991-ம் ஆண்டு ஜூன் 11-ந்தேதி கைது செய்திருந்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 120(பி)ன் கீழ் குற்றவியல் சதி செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பேரறிவாளனுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. அவருடன் முருகன், சாந்தன், நளினி ஆகியோருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

1998-ம் ஆண்டு தடா நீதிமன்றம் விதித்த இந்த தண்டனையை 1999-ம் ஆண்டு சுப்ரீம்கோர்ட்டும் உறுதி செய்தது.

இந்த நிலையில் பேரறிவாளனை விடுவிக்க பல்வேறு அமைப்புகள் சட்ட போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தின. பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து தனது மகன் விடுதலைக்கு குரல் கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தார்.

அதற்கு உரிய பலன் கிடைக்காத நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு பேரறிவாளன் உள்பட 4 பேரையும் தூக்கில் போட உத்தரவிடப்பட்டது. ஆனால் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க 10 ஆண்டுகள் தாமதம் ஆனதால் தூக்கிலிடக் கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர். அதோடு பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மாநில அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் அறிவுறுத்தியிருந்தனர். இதனால் பேரறிவாளன் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மத்திய அரசு அனுமதியின்றி பேரறிவாளனை விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார். ஆனால் சட்ட சிக்கல்கள் காரணமாக அவரது முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பேரறிவாளன் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறார். அவர் 1991-ல் கொடுத்த வாக்கு மூலம் தவறாக மொழி பெயர்க்கப்பட்டதால்தான், அவருக்கு அது மரண தண்டனையை பெற்று கொடுத்து விட்டதாக ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. உயர் அதிகாரியே கூறினார்.

இதன் மூலம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பேரறிவாளன் அப்பாவி என்பது தெரிய வந்தது. என்றாலும் அதன் பிறகும் பேரறிவாளனை சிறையில் இருந்து வெளியில் கொண்டு வர இயலவில்லை. அவரது தாயார் அற்புதம்மாள் தன் மகன் விடுதலைக்காக போராட்டம் நடத்தி சோர்ந்து போய் விட்டார்.

இந்த நிலையில் பேரறிவாளன் விடுதலை விவகாரம் இன்று மீண்டும் எழுந்துள்ளது. கபாலி, காலா படங்களை இயக்கிய டைரக்டர் பா.ரஞ்சித் மூலம் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை டைரக்டர் பா.ரஞ்சித் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். டெல்லியில் உள்ள ராகுல்காந்தியின் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது நடிகர் கலையரசனும் உடன் இருந்தார்.

ராகுலும், பா.ரஞ்சித்தும் சுமார் 2 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சினிமா, அரசியல் உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து பேசினார்கள்.

அந்த சமயத்தில் அவர்களது பேச்சு ராஜீவ் கொலையாளிகள் மீது திரும்பியது. அப்போது பேரறிவாளன் பற்றி ராகுலிடம் டைரக்டர் பா.ரஞ்சித் விளக்கி கூறினார். அதோடு பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி, “ராஜீவ் கொலை குற்றவாளியான பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்வதில் தனக்கோ, தனது குடும்பத்தினருக்கோ எந்தவித ஆட்சேபனையும் இல்லை” என்று தெரிவித்தார். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த பா.ரஞ்சித், ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதுபற்றி ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் டைரக்டர் பா.ரஞ்சித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

டைரக்டர் பா.ரஞ்சித்தை சந்தித்தேன். தமிழில் மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய பிளாக் பஸ்டர் படங்களை இயக்கியவர். அவருடன் நடிகர் கலையரசனையும் சந்தித்தேன்.

நாங்கள் அரசியல், சினிமா மற்றும் சமுதாயம் பற்றி பேசினோம். இந்த சந்திப்பும், பேச்சும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற பேச்சுகள் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன்.

இவ்வாறு ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

பேரறிவாளனை விடுவிக்க ஆட்சேபனை இல்லை என்று ராகுல் தெரிவித்துள்ள கருத்து, இந்த விவகாரத்தில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் உருவாக்கி உள்ளது. ராகுல் கோரிக்கையை மத்திய அரசு ஏற்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

முன்பு சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதால்தான் ராஜீவ் கொலையாளிகளில் ஒருவரான நளினியின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதே போன்று ராகுலின் வேண்டுகோளை ஏற்று பேரறிவாளனை விடுதலை செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறியுள்ளனர்.

மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் பேரறிவாளனை விடுவிக்க தமிழக அரசும் தயாராக உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அவர்கள் 7 பேரை விடுவிப்பது தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அதே வழியில் தற்போதைய அரசும் செயல்படுகிறது.

இந்நிலையில் ராகுல் காந்தி, பேரறிவாளனை விடுவிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என கூறியதாக தெரிகிறது. இந்த கருத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறோம். அவ்வாறு மத்திய அரசு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமேயானால் தமிழக அரசு அதற்கு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

20 வயதில் கைதான பேரறிவாளனின் இளம் பருவம் முழுவதும் சிறையிலேயே கழிந்து விட்டது. சிறை வாழ்க்கை பற்றி அவர் தனி புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார்.

சிறையில் இருந்தபடி பட்டப்படிப்பும் படித்துள்ளார். அதில் அவர் முதல் மாணவராக தேறி தங்கப் பதக்கமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.