தெண்டுல்கர் மகன் அர்ஜூன் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். #IND19vSL19
U19 கிரிக்கெட்- இலங்கைக்கு எதிராக சிறப்பாக பந்து வீசினார் அர்ஜூன் தெண்டுல்கர்
19 வயதிற்கு உட்பட்டோருக்கான இந்திய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் சென்று இரண்டு நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் இன்று கொழும்பில் தொடங்கியது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி கே மிஷரா, விக்கெட் கீப்பர் பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் நான்கு ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
3-வது ஓவரை அர்ஜூன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி விட்டுக்கொடுத்த அர்ஜூன், அடுத்த பந்தில் மிஷராவை எல்பிடபிள்யூ மூலம் வீழ்த்தினார். இதனால் இந்திய அணிக்காக தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார். இலங்கை அணி 55 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. அர்ஜுன் தெண்டுல்கர் 11 ஓவர்கள் வீசி 2 மெய்டன் ஓவருடன் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.