ஆசிரியை ஒருவரை கொலை செய்த குற்றம்! நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு!

0

திருகோணமலையில் ஆசிரியை ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இருவருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை இன்று திருகோணமலை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களில் முதலாவது, இரண்டாவது சந்தேகநபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஆசிரியைரை படுகொலை செய்தனர் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

31 வயதுடைய பாலசிங்கம் நகுலேஸ்வரன், 21 வயதுடைய விஜயகுலசிங்கம் சந்திரபாலன் என்போருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 25 வயதுடைய கிருஷ்ணபிள்ளை சஜிவ்காந்தன், 20 வயதுடைய சிவகுமரன் சிவரூபன் என்போர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

2011.11.24ஆம் திகதி திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாட்டாளிபுரம் – சாந்தபுரம் ஆகிய இடங்களுக்கு இடையில் ஆசிரியர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த பகுதியில் உள்ள வயல் வெளிக்கு அருகில் காலை 6.45 மணியளவில் நகைகளை கொள்ளையடித்து விட்டு, ஆசிரியை கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சந்தோசபுரம் – கட்டைப்பரிச்சான் பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய ஆசிரியை குருகுலசிங்கம் ஸ்ரீவதனி என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

இத தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர்.

இதில், 31 வயதுடைய பாலசிங்கம் நகுலேஸ்வரன், 21 வயதுடைய விஜயகுலசிங்கம் சந்திரபாலன், 25 வயதுடைய கிருஷ்ணபிள்ளை சஜிவ்காந்தன், 20 வயதுடைய சிவகுமரன் சிவரூபன் என்போரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு மூதூர் நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், நீதவானால் திருகோணமலை மேல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தப்பட்டது.

இதையடுத்து இன்று இந்த வழக்குக்கான தீர்ப்புக்கு திகதி குறிப்பிடப்பட்டிருந்தது.

இதில், குறித்த ஆசிரியரின் உடம்பில் 13 இடங்களில் காயம் காணப்பட்டுள்ளதாகவும், நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குறித்த கொலையை செய்ததாக கூறப்படும் இருவருக்கு மரண தண்டணை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.