மன்னாரில் இடம் பெற்று வரும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகளை புகைப்படம் எடுப்பதற்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், தொலைக்காட்சி, அச்சு மற்றும் சமூக வலையமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் நேற்று இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊடகவியலாளர்கள் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தடை உத்தரவு தொடர்பில் மன்னார் நீதவான் நீதிமன்றத்தினால் வெளியிடப்பட்டுள்ள கட்டளையில்,
“மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் B 232/2018 கொண்ட வழக்குடன் சம்மந்தப்பட்ட அகழ்வு மேற்கொள்ளும் பூமியில் உட்பிரவேசித்தல், புகைப்படம் எடுத்தல், மற்றும் ஒளிப்பதிவு செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் B 232/2018 கொண்ட வழக்குடன் சம்மந்தப்பட்ட கட்டிட நிர்மாணப்பணிக்கு ஒதுக்கப்பட்ட ‘சதொச’ பூமியில் மண் அகழ்வு செய்யும் போது மனித எச்சங்கள் சில காணப்பட்டதுடன் அது சம்மந்தமாக நிபுணர்களின் மதிப்பறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுவதற்கான அகழ்வுப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றது.
குறித்த அகழ்வு சம்மந்தமாக மேற்கொள்ளப்படும் புலனாய்வு நடவடிக்கை பூர்த்தி செய்யாததாலும், இந்த புலனாய்வில் உள்ள முக்கியத்துவம் கருதி இடையூறுகள் இல்லாமல் தொடர்ந்து புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காகவும் அகழ்வு மேற்கொள்ளப்படும் பூமியில் சகல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், தொலைக்காட்சி, அச்சு மற்றும் சமூக வலையமைப்புக்கள் அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான அதிகாரியின் உறிய அனுமதி இன்றி எந்த ஒரு வெளி நபர்களுக்கும் குறித்த பூமிக்கு உற்பிரவேசித்தல், புகைப்படம் எடுத்தல், ஒளிப்பதிவு செய்தல் மற்றும் அகழ்வு சம்மந்தமாக கலந்துரையாடலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.