சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிரியாணிக்கடையில் ஊழியர்களைத் தாக்கிய தி.மு.க நிர்வாகி யுவராஜ் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பிரபல பிரியாணிக்கடையில், கடந்த 29-ம் தேதி இரவு 15 பேர் கொண்ட கும்பல் நுழைந்து ஊழியர்கள், மேலாளர், உரிமையாளர் ஆகியோரை சரமாரியாகத் தாக்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அப்போது, தாக்குதல் நடந்தபோது சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளையும் போலீஸாரிடம் கொடுத்தனர்.
அந்த வீடியோ வெளியானதும், சம்பந்தப்பட்ட தி.மு.க நிர்வாகிகள் யுவராஜ், திவாகர் ஆகியோரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்தது கட்சித் தலைமை. தொடர்ந்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கு இன்று சென்றார். தாக்குதலில் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பிரியாணி கடையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஊழியர்களையும் மேலாளரையும் ‘பாக்ஸர்’ போல முகத்திலேயே குத்தியவர் யுவராஜ். அவரின் பின்னணி குறித்து தி.மு.க-வினரிடம் விசாரித்தோம்.
“யுவராஜ், சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்தவர். சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் படித்தார். அப்போதே பல சர்ச்சை சம்பவங்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுள்ளது. ஜிம் வைத்து நடத்தினார். அப்போதுதான் அவருக்கு சிலருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு இந்து அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்டார். கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபலமானவர் ஒருவருக்கு வலதுகரமாக யுவராஜ் செயல்பட்டார். அப்போது அந்த பிரபலமானவருக்கு போலீஸார் நெருக்கடி கொடுத்ததும் அவரிடமிருந்து விலகினார். அதன்பிறகு காங்கிரஸை விட்டு பிரிந்துசென்ற ஒருவரின் கட்சியில் சேர்ந்தார். சட்டமன்ற தேர்தலின்போதுதான் தி.மு.க.வில் இணைந்தார். யுவராஜ், கைகளிலும் கழுத்திலும் செயின், கைசெயின், மோதிரங்களை அணிந்திருப்பார். இதனால்தான் அவரை நடமாடும் நகைக்கடை என்று தி.மு.க-வினர் அழைப்பார்கள்” என்றனர்.