உங்கள் கொடி உயரவே பறக்கிறது
உங்கள் குரலும் முகமும்
எங்களை கீறீ
நிறையவே வலிமையை சாதித்துவிட்டது.
குண்டுகளால் காயப்பட்ட
எமது முகங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன
அலறிவிடாமல்
காயங்கள் நசுக்கி மருந்திடப்பட்டிருக்கின்றன.
நாங்கள் மறைந்திருந்தபடி
மிக தொலைவிலிருந்தே பேசுகிறோம்
குருதி பீறிட உங்கள் நகங்களால் கீறப்பட்ட
எமது முகங்களை
நீங்கள் விரும்பியபடி
யாரும் பார்க்கமுடியாது.
அதனால் தொடர்ந்தும்
நீங்கள் எல்லோரும்
விமானங்களையும் குண்டுகளையும்
எறிகணைகளையும் உற்பத்திசெய்யுங்கள்.
எமது முகங்களில்
நீங்கள் செய்த விஞ்ஞானங்களை
எறிந்து காயப்படுத்தி
சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
எங்கள் முகங்களுக்காகவே
இன்னும் புதியவைகளை
சிந்தனை செய்தும் பரிமாறுங்கள்.
உங்கள் சாதனைகளின்
ஒளிப்பதிவுகள் இதோ வருகின்றன
உலகம் முழுவதிலும்
முக்கியமாக காண்பிக்கப்படுகிறது
உங்கள் உற்பத்தி
குறித்தே எல்லோராலும் பேசப்படுகிறது
திருப்தியுடன் கைகளைப் பரிமாறி
அதிகாரங்களைப் பகிர்ந்து
புன்னகைத்து உயர்த்திப் பேசுங்கள்.
மறைக்கப்பட்ட எமது
முகங்களின் கீறல்களிலும்
நசுக்கப்பட்ட எமது குரல்களின்
முனகல்களிலும்
உங்கள் வல்லமை பொருந்திய
கொடிகளை உயரப்பறக்கவிடுங்கள்.
0
தீபச்செல்வன்
ஆகஸ்ட் 2006
(‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ தொகுப்பிலிருந்து)