தமிழருக்கு சோறும் பருப்பும் தீத்த முனையும் மைத்திரி ரணில்! தீபச்செல்வன் காட்டம்!!

0

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபி புனரமைப்புப் பணிகள் இலங்கை இராணுவத்தின் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் தூபி புனரமைப்பில் ஈடுபட்டவர்களை பார்த்து ‘வெளியில் வாழ ஆசையில்லையா? பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா’ என்று அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இந்த வாசகங்கள் இந்நாட்டு அரசின் வாசகங்களாகவே தென்படுகின்றன. உண்மையில் நல்லாட்சியில் தமிழர்களுக்கு பருப்பும் சோறும் உண்ணும் நிலமைதான் உருவாக்கப்படுகிறதா?

இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர், ஏற்பட்டிருக்கும் ஆட்சி நல்லாட்சி என்று பேசப்படுகிறது. போரில் கொல்லப்பட்ட மக்களையும் விடுதலைப் போரில் ஈடுபட்டு சாவடைந்த போராளிகளையும் நினைவு கூரலாம் என்று இலங்கை அரசே விளக்கங்களை அளித்தது. போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமையை ஏற்றுக் கொண்ட அரசாங்கம், ஜேவிபி போராளிகளை நினைவு கூரும் உரிமையைப்போலவே விடுதலைப் புலிப் போராளிகளையும் நினைவு கூரும் உரிமையும் தமிழர்களுக்கு உண்டு என்று வாதிட்டது.

இத்தகைய பேச்சுக்களுக்கும் களத்தில் தமிழ் மக்களுடனான அணுகுமுறைகளுக்கும் சில வேறுபாடுகளும் முரண்பாடுகளும் காணப்படுகின்றன. மாவீரர் துயிலும் இல்லத்தில் மக்கள் தன்னெழுச்சியாக சென்று துப்புரவு செய்து மாவீரர் தினத்தை கொண்டாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது அங்கே இராணுவப் புலனாய்வாளர்கள் மாற்று உடைகளில் வந்து படம் பிடித்துச் சென்றுள்ளார்கள். மாவீரர் துயிலும் இல்லத்தில் புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்ட முன்னாள் போராளியும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமான ஜெயக்குமாரை நான்காம் மாடிக்கு அழைத்து கடுந்தொனியில் விசாரணை செய்யப்பட்டுள்ளது.

அவரிடமும் பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா என்றே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதைப்போல தற்போதும் யாழ் பத்திரிகையாளர்களுக்கு நான்காம் மாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே புத்தக கடைகளுக்குச் செல்லும் இராணுவப் புலனாய்வாளர்கள், அங்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த புத்தகங்களை விற்பனை செய்தால் பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா என்றே கேட்கின்றனர். இந்தக் கேள்வி சாதாரணமான ஒன்றல்ல. தமிழ் மக்களை எந்த நேரத்திலும் இன வதை சிறைகளில் அடைப்போம் என்ற பாரபட்சமான, ஒடுக்குமுறையான அணுகுமுறை.

ஏற்கனவே சிறைகளில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பருப்பும் சோறும் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு இந்த அரசு இணங்கவில்லை. எத்தனையோ போராட்டங்கள் நடந்தும் துயரமான மரணங்கள், இழப்புக்கள் நடந்தும் அரசாங்கம் தமிழ் இளைஞர்களுக்கு பருப்பும் சோறும் வழங்குவதில் உறுதியாக இருக்கிறது. தமிழ் மக்களை தொடர்ந்தும் அச்சுறுத்தவும் ஒடுக்கி வைத்திருக்கவுமே இவ்வாறு அவர்கள் சிறையில் உள்ளனர். காலம் காலமாக ஈழத் தமிழர்களை ஒடுக்கி ஆளும் அதே பேரினவாத இராணுவ அணுகுமுறையே இந்த சொல் தாக்குதலாகும்.

அண்மையில் வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலைக்கு சென்று வழிபட்டால் கைது செய்வோம் என்று இலங்கை பொலிஸார் எச்சரித்தனர். தமிழ் மக்கள் தங்கள் நம்பிக்கை மிக்க வழிபாடுகளை முன்னெடுத்தாலும் அதற்குத் தண்டனையும் பருப்பும் சோறுமா? அப் பகுதி தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்டதாம். வெடுக்குநாறி மலை அப் பகுதி தமிழ் மக்களின் பண்பாட்டு உரிமை. அதில் தலையிடவோ, தடுத்து நிறுத்தவோ தொல்லியல் திணைக்களம் ஒன்று தேவையில்லை. அவர்களின் பண்பாட்டை பாதுகாப்பதும் அவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பதுமே இந்த திணைக்களத்தின் உண்மையான பணி அத் திணைக்களம் புரிந்து கொள்ள வேண்டும்.

வடக்கு கிழக்கு மண்ணிலே, இந்த மண்ணின் தொல்லியல் அம்சங்களுக்கும் அடிப்படைகளுக்கும் பண்பாட்டுக்கும் மாறாக எத்தனையோ இடங்களில் புத்தர் சிலைகளும் பௌத்த விகாரைகளும் அமைக்கப்பட்ட வேளையில் இந்த தொல்லியல் திணைக்களம் எங்கு சென்றது? அல்லது அவைகளை தமிழ் மண்ணில் திணித்து தமிழ் மண்ணின் பண்பாட்டை ஒடுக்கி அழிப்பதுதான் இந்தத் தொல்லியல் திணைக்களத்தின் வேலையா? இவர்களும் தமிழர்களின் பண்பாட்டு உரிமையை மறுத்து அவர்களுக்கு பருப்பும் சோறும் உட்டப் பார்க்கிறார்களா?

ஈழத் தமிழர்களின் வாழ்வில் தெய்வங்களையும் போரில் இறந்த மக்களையும் உரிமைக்காக போரிட்டு மாண்ட போராளிகளையும் வழிபடுவது அல்லது நினைவுகூர்வது என்பது அவர்களின் பண்பாடாகிவிட்டது. அந்தப் பண்பாட்டை மறுக்க எவருக்கும் எந்த அரசுக்கும் உரிமை இல்லை. மக்களின் பண்பாட்டு உணர்வை, உரிமையை அங்கீகரிப்பது அரசின் கடமை. அவ்வாறு இல்லாவிட்டால் அது அந்த மக்களின் அரசில்லை என்பதே அர்த்தம். எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதாக காட்டிக் கொண்டு உள்ளுக்குள் மகிந்தவின் கொடுங்கோல் ஆட்சியின் இராணுவ அணுகுமுறைகளை பின்பற்றுவதையே பருப்பும் சோறும் வாசகங்கள் உணர்த்துகின்றன.

மகிந்த ராஜபக்சவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுக்கு கட்டி ஆட்சியை கைப்பற்ற உதவிய ஈழத் தமிழ் மக்களுக்கு, இவ் நல்லாட்சி அரசு, பருப்பும் சோறும் ஊட்டத்தான் முனைகிறதா?

தீபச்செல்வன்

நன்றி- குளோபல் தமிழ் செய்திகள்

Leave A Reply

Your email address will not be published.