யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலி யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ளது.நல்லூர் உற்சவ காலம் ஆரம்பிக்கப்படவுள்ளதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடம் போர்க் காலத்தில் இராணுவத்தினரால் உடைக்கப்பட்டது.
இந்நிலையில் அழிக்கப்பட்ட நினைவிடப் பகுதியில் கடந்த காலத்தில், திலீபனின் நினைவு தின அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றுவந்தன.
இதனிடையே நல்லூர் ஆலய மகோற்சவ காலங்களில் அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபடுவோர் மற்றும் ஆலயத்திற்கு வருவோர் நினைவிடத்தின் புனிதத் தன்மையை பேணாது நடப்பதாகப் பரவலான குற்றசாட்டுக்கள் எழுந்திருந்தன.
எனவே எதிர்வரும் 16 ஆம் திகதி நல்லூர் ஆலய மகோற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் திலீபனின் நினைவிடத்தின் புனித தன்மையை பேணும் நோக்குடன் மாநகர சபையினால் , நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.