பிரபாகரன் கொல்லப்பட்டபோது வேதனை அடைந்தேன்! ஜெர்மனில் ராகுல்!

0

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டபோது தானும், தனது சகோதரி பிரியங்கா காந்தியும் மகிழ்ச்சி அடையவில்லையென, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஹம்பர்க் நகரில் உள்ள புயுசிரியஸ் சம்மர் என்ற பாடசாலையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே இதனை கூறினார்.

தன்னுடைய பாட்டி இந்திரா காந்தி, தன் தந்தை ராஜீவ் காந்தி ஆகியோர் வன்முறைக்கும், தீவிரவாதத்துக்கும் இரையாகியதாகவும் ராகுல் காந்தி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தான் வன்முறையால் பாதிக்கப்பட்டவன் என்றும், தனது பேச்சுக்கள் அனைத்தும் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடே என்றும் அவர் கூறியுள்ளார்.

வன்முறையை வெல்வதற்கும், அதைக் கடந்து வருவதற்கும் ஒரேவழி மன்னிப்பு மட்டுமே என தெரிவித்துள்ள ராகுல், மாறாக வன்முறையை முறியடிக்க வேறு ஆயுதங்கள் இல்லை எனவும் கூறியுள்ளார்.

ஒருவருக்கு மன்னிப்பு அளிப்பதன் மூலம் உண்மையில் என்ன நடந்தது?, ஏன் நடந்தது என்பதை அறிய முடியும் என சுட்டிக்காட்டிய காங்கிரஸ் தலைவர், வன்முறையைப் பற்றி சிந்தித்து அதற்கு எதிராக செயற்படாமையே பலம் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 1991 ஆம் ஆண்டு தனது தந்தை கொல்லப்பட்டதாகவும், ஆனால், கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணித்த போது தானும், தனது சகோதரியும் வேதனை அடைந்தாகவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரனின் மரணம் குறித்து தனது சகோதரி பிரியங்காவை தொலைப்பேசியில் அழைத்து தன் மனம் ஒருவிதமான பதற்றத்துடன் இருப்பதாகவும், அதனை எண்ணி மகிழ்ச்சி கொள்ளவில்லை எனக் கூறியதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் குழந்தைகளின் மனோநிலையுடன், தன்னை இணைத்து பார்ததன் காரணமாகவே, தன்னால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

எனவே வன்முறையை எதிர்த்து போரிட அஹிம்சையால் மட்டுமே முடியும் எனவும் வேறு எந்த வழியும் இல்லை எனவும் ராகுல் தெரிவித்தார்.

வன்முறைக்குள் இருந்து கொண்டு வன்முறையை எதிர்த்து வன்முறை ஆயுதத்தால் போரிடலாம் வெற்றிபெறலாம். ஆனால், மீண்டும் அந்த வன்முறை வளரக்கூடும் எனவும் அவர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கடந்த 1984 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது மெய்பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதேபோல் 1991 ஆம் ஆண்டு, மே 21 ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த ராஜீவ் காந்தி கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.