புலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள்!

0

இலங்கை ஒரு குட்டித்தீவு. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டது. எனவே இந்தத் தீவை சதாகாலமும் பேரலைகள் தாக்கிக்கொண்டிருப்பது சதாரணமானதொன்று. இங்கு குறிப்பிடப்படும் பேரலைகள் என்பதை, பேரரசியல் என்பதாகவும் மாற்றிப்பயன்படுத்தலாம். அதாவது சதாகாலமும் சர்வதேச அழுத்தங்களுடன் கூடிய பேரரசியலில் சிக்குண்டவண்ணமே இந்தத் தீவு கரைந்திருக்கிறது. ஆனால் முற்றுமுழுதாக அழிந்துவிடவில்லை. சுனாமியின்போதும், பெரும் அரசியல் சுனாமிகளின்போதும் முற்றுமுழுதாக அழிந்துவிடவில்லை.

அதற்குப் பிரதான காரணமே, “இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கவும்” வாங்கிய மிளகாயை விற்றவன் தலையிலேயே வைத்து அரைக்கவும் கூடியளவிற்கு இந்தத் தீவை ஆட்சி செய்தவர்கள் பெற்றிருந்த இராஜதந்திர வலிமைதான். இதனையே மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு, “கடிக்க வரும் நாயையே தன் காவலாளியாக மாற்றும் இராஜதந்திர வலிமைபொருந்திய சிங்கள ஆட்சியாளர்கள்“ எனக் குறிப்பிடுவார்.

வரலாற்று நோக்கில் பார்த்தால் இந்தியா தான் இந்தத் தீவை விழுங்கிவிடுமளவுக்கு மிக அண்மையில் இருங்கும் பெருந்தேசம். அதற்கு அடுத்த நிலையில் சீனா. அதற்கும் சற்றுத் தூரமாய் மேற்கு நாடுகள். இந்தியாவையும், சீனாவையும், திருமணம், பௌத்தம், வணிகம் போன்ற ஆயுதங்களைக் கொண்டே இலங்கை சமாளித்து வந்திருக்கிறது. மேற்கின் நேரடி ஆதிக்கத்தை தவிர்க்கவே முடியாமல் சில நூற்றாண்டுகள் ஏற்கவேண்டியாயிற்று. ஆயினும் காலனியாதிக்க முடிவோடு இலங்கை பெற்ற சுதந்திரமானது, இந்தத்தீவின் அரசியலை, அது பராம்பரியமாக முன்னெடுத்துவந்த இராஜதந்திர ஆயுதத்தை அடுத்த கட்டத்திற்கு இழுத்துப்போனது.

அந்த இராதந்திர ஆயுதம்தான் தமிழர்களும், அவர்கள் நடாத்திய விடுதலைப் போராட்டமும்.

பிரித்தானியர்கள் இலங்கையை சிங்களவர்களுக்கு மட்டும் உரித்தான ஒற்றைத்தேசமாகப் பிரகடனப்படுத்திவிட்டுப்போயினர். இங்கு மரபுவழியாக, வரலாற்று வழியாக தமிழர்கள் வாழ்ந்து வந்த வடக்கு, கிழக்கு பகுதிகளும் இலங்கையின் இறையாண்மைக்குள் உள்ளடக்கம்பெற்றது. இது ஒருவித இனஒடுக்குமுறையாகவும் மாறியது. இதற்கெதிராகத் தமிழர்கள் போராடத்தொடங்கினர்.

அந்தப் போராட்டம், பேரரசியலுக்கு எதிரான ஆயுதமாக இலங்கையினாலும், இலங்கையை தம் கட்டுக்குள் கொண்டுவர நினைக்கும் நாடுகளுக்கு துரும்பாகவும் பயன்படுத்தப்பட்டது. ஒரு புறத்தில் தமிழர்கள் சுதந்திர தேசத்துக்காகக் உயிர்கொடுத்துப் போராடிக்கொண்டிருக்க, மறுபுறத்தில் சிங்கள தேசம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள அப்போராட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டது.

30 வருடங்கள். இலங்கையில் காலூன்ற முயற்சித்த அனைத்து நாடுகளையும் தமிழர் நடத்திய ஆயுதப்போராட்டத்தைக் கொண்டே வெற்றிகரமாகக் கையாண்டது. தன்னைப் பேரலைகளிலிருந்து காப்பாற்றிக்கொண்டது.

3 தாசாப்தங்களுக்கு மேலும் இந்தக் குட்டித்தீவிடம் ஏமாற உலகம் (அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள்) விரும்பவில்லை. தமக்குப் பொருத்தமானதொரு பொம்மையை இலங்கையின் மன்னராக்கியது. அவர்தம் குடும்ப பரிவாரங்களை அரசவை பரிவாரங்களாக்கியது. தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை எவ்வளவு விரைவாக அழிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக துடைத்தழிக்கும்படி உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தன. யார் அதிகம் உற்சாகப்படுத்துவது என்பதிலும், அவர்களுக்குள் போட்டியிருந்தது. அதில் சீனாவும், இந்தியாவும் முதலிரண்டு இடங்களையும் நிலைதளம்பாது தக்கவைத்துக்கொண்டன. அதிகாரத்தின் நிறைபோதையில் நின்ற மன்னரும் பரிவாரங்களும் மகிழ்ச்சியில் திழைத்தனர். தமிழர்களைக் கொல்லும் படைகளுக்கு ஆள் போதவில்லையெனில், புத்தர் கையிலும் ஆயுதத்தைக் கொடுத்து கொலைக் களத்துக்கு அனுப்புங்கள் என உத்தரவிடவும் தயங்காத மனநிலையில் கொழுவிற்றிருந்தனர். இப்படியொரு வேளையில்தான் மே 2009 ஆம் வந்தது. தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனித்தது.

அந்த மௌனிப்பு இலங்கையின் நூற்றாண்டுகால இராஜதந்திர பயணத்தை அஸ்தமிக்கச் செய்தது.

வடக்கு, கிழக்கு இலங்கையின் கடல் எல்லைக் கோட்டை இதுவரையில் தாண்டியிராத இந்தியா, யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக துணைத்தூதரகத்தைத் திறந்தது. கலாசார விழாவில் தொடங்கி, காது குத்து வரைக்கும் தன் செல்வாக்கிற்குட்பட்டதாக அமைய வேண்டும் என்பதில் மிகக் கவனமாக செயற்பட்டது இத்துணைத்தூதரகம். கல்வி, புலமை, இந்து சமயம், கலாசாரம், வணிகம், வணிக சந்தைகள், விவசாயம், மருத்துவம், போக்குவரத்து என அனைத்து வாழ்வியல் துறைகளிலும் தன் தலையீட்டை கொண்டுவந்தது.

தன் நாட்டில் இன்னமும் கோடிக்கணக்கான மக்கள் தெருவில் மலங்கழிக்க, மட்டக்களப்புக்கு 3400 மலக்குழிகளை அமைத்துக்கொடுக்க முன்வந்தது. தன் நாட்டில் பல கோடி கிராமங்கள் வீதிகளே அற்றிருக்க, வடக்கிற்கான புகையிரதப்பாதையை மின்னல்வேகத்தில் புனரமைத்து முடித்தது. மும்பை, சென்னை, புதுடில்லி என இந்தியாவின் பெருநகரங்களையெல்லாம் வீடற்ற குடும்பங்கள் அசிங்கப்படுத்திக்கொண்டிருக்க, இலங்கையின் வடக்கு கிழக்கி, 50 ஆயிரம், ஒரு லட்சமென வீட்டுத்திட்டங்களை வாரிவழங்கியது. மிகப் பிந்தியதாக, அம்ப்யூலன்ஸ் வசதியின்மையால் இறந்த தன் மனைவியின் சடலத்தை மருத்துமனைியிலிருந்து தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்த கணவர் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, சர்வதேச அளவில் அவமானப்பட்ட ஒரு பெருந்தேசம், யாழ்ப்பாணத்திற்கு 50 அம்ப்யூலன்ஸ்களை அன்பளிப்பாக வழங்கியது என்ற செய்தி வந்திருக்கிறது.

இவ்வளவு ஆழமாக வடக்கு, கிழக்கு பகுதிகளின் ஆணிவேர் வரை இறங்கி வேலைசெய்யுமளவுக்கு இந்தியாவின் செழிப்பான மாநிலமாக இந்தப் பகுதிகள் மாற்றப்பட்டிருக்கின்றன. இந்தியாவிற்கும், தமிழர் பகுதிகளுக்கும் இடையிலான பண்பாட்டுத் தொடர்புகளில் இருக்கும் ஒற்றுமை காரணமாக இந்த மாற்றங்கள் மிகச் சுகமாக இருக்கின்றன. இதன் விளைவுகள் மிக மோசமானவை. சொந்தத் தேசத்தையே இலவசமாக கொடுக்கும் நிலைக்கு ஒப்பானவை.

தெற்கின் நிலமையோ இன்னும் பரிதாபம். இலங்கையின் தெற்கு எனப்படுவது இந்தத்தீவின் ஆட்சியதிகாரத்தைப் பெற்ற இறைமையுடன் கூடிய தேசத்தைக் குறிப்பதுதான். தமிழரின் ஆயுத மௌனிப்போடு நூற்றாண்டு காலமாகக் காப்பாற்றப்பட்டு வந்த அந்த பௌத்த மேலான்மைவாத சிங்கள பெருந்தேசிய இறைமை சுக்குநூறாகியிருக்கிறது.

வடக்கையும், கிழக்கையும் எப்படி இந்தியா தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டதோ, அதேபோல தெற்கை தன் முழுக்கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவந்துவிட்டது சீனா.

இலங்கையின் வரைபடத்தையே மாற்றுமளவுக்கு சீனாவின் நேரடி ஆக்கிரமிப்பு அகலித்திருக்கிறது. அண்மையில் வெளியிடப்பட்ட இலங்கையின் வரைபடத்தில் காலி முகத்திடலில் 269 ஹெக்ரேயர் நிலம் புதிதாக உருவாக்கப்பட்டு வரைபடத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடல் பகுதியில் சீனா அமைத்து வரும் துறைமுக நகரத்துக்குத்தான் இவ்வளவு இடமும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இலங்கையின் இயற்கை அமைப்பையே சிதைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சீன நகரம் இந்தத் தீவை பீஜிங்கின் நேரடி காலனியின் கீழ் கொண்டு சென்றிருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.

அதேபோலவே அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் நேரடி ஆளுகைக்குட்பட்டே அமைக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் காலத்திலேயே இந்த இரண்டு பாரிய சீன ஆக்கிரமிப்புக்களும் நிகழ்ந்தேறின. தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிக்கவும், அதன் பின்னர் பெருந்தெருக்களை அமைக்கவும் என சீன அரசாங்கத்திடம் மகிந்த பெற்றுக்கொண்ட கடனுக்கு பிரதியீடாகவே இந்த இரு இடங்களும் சீனாவுக்கு வழங்கப்பட்டன.

2015 ஆம் ஆண்டில் மேற்கு சார்புடைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சியைக் கைப்பற்றியபோதிலும், சீனாவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை. அம்பாந்தோட்டையில் 15,000 ஏக்கர் நிலத்தையும் துறைமுகத்தையும் 99 வருட குத்தகைக்கு வழங்கவேண்டிய இக்கட்டு நிலை உருவானது.

ஒரு நாட்டை வளைப்பதற்கு வாளை விட கடன் சிறந்த ஆயுதம் என்ற சீன பழமொழி தெற்கில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. நக்குண்டார் நாவிழந்தார் நிலையை உருவாக்க, அன்பளிப்பின்மேல் அன்பளிப்புக்களை கொட்டி வடக்கு, கிழக்கை தன்கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது இந்தியா.

தமிழர்களது ஆயுதப் போர் மெளித்து 10 வருடங்களுக்குள் இவ்வளவு மாற்றங்களும் நிகழ்ந்திருக்கிறன. இந்தத் தீவு தன் இறைமையை இழந்திருக்கிறது. இராஜதந்திரப் பாரம்பரியத்தை அழித்திருக்கிறது. தன் தலையில் தானே மண்ணையள்ளிக் கொட்டி மூழ்கிக்கொண்டிருக்கிறது.

நன்றி – ஜெரா, எதிரொலி

Leave A Reply

Your email address will not be published.