மத்தள விமான நிலையத்தினை இந்தியாவிற்கு வழங்கும் செயற்பாட்டில் தமது தலையீடு இருக்காது என்றபோதிலும், அங்கு எந்தவொரு இராணுவ செயற்பாடுகளும் இடம்பெறக்கூடாது என சீனா வலியுறுத்தியுள்ளது.
மத்தள விமான நிலையத்தை குத்தகை அடிப்படையில் இந்தியாவிற்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், அது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளியாகும் நாளிதழொன்றுக்கு சீனத் தூதரகத்தின் அரசியல் பிரிவுக்கான தலைவர் லூ ஜொங் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், ”மத்தள விமான நிலையத்தை யாருக்கு குத்தகைக்கு வழங்குவது என்பதை தீர்மானிக்கும் உரிமை இலங்கை அரசாங்கத்திற்கு உண்டு.
பிறிதொரு நாட்டு அரசாங்கத்தின் தீர்மானத்தில் தலையீடு செய்வதற்கான உரிமை எமக்கில்லை. எனவே, இவ்விடயத்தில் சீனா ஒருபோதும் தலையீடு செய்யாது.
ஆனால், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா எவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தி வருகிறதோ, அதேபோன்று மத்தள விமான நிலையமும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்பட வேண்டும். மத்தள விமான நிலையத்தில் எவ்வித இராணுவச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படக் கூடாது” எனத் தெரிவித்தார்.