அராஜகம் புரிந்த இந்திய அரசுக்கு தியாகம் மூலம் பதிலடி கொடுத்தவர் தியாகி திலீபன் ! ஆறாம் நாள் முழு விபரம்
அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதிகாலையில் ஒரு அதிசயம் நிகழ்ந்திருந்தது. ஆம் ! இன்று திலீபன் காலை 5 மணிக்கே படுக்கையை விட்டு எழுந்து விட்டார். அதுமட்டுமன்றி தான் சிறுநீர் கழிக்கப்போவதாகக் கூறினார். அவர் இருக்கும் நிலையிலே படுக்கையை விட்டு எழுந்து செல்வது என்பது முடியாமல் இருந்ததால் படுக்கையிலேயே சலப் போத்தலைக் கொடுத்தேன்.
நாலைந்து நாட்களாகப் படுக்கையிலே கிடப்பதாலும் நீர் அருந்தாமல் இருப்பதாலும் அவரது சலப்பை பாதிக்கப்பட்டிருக்கலாம்….. இதை அவரிடம் எப்படிக் கூறுவது? தூன் மறைவிடம் சென்று சிறுநீர் கழிக்கப் போவதாகக் கூறினார். அவரின் விருப்பத்துடன், அவரைக் கைத்தாங்கலாகப் பிடித்து இறக்கி மேடையின் பின்பக்கம் கொண்டு சென்றோம் பதினைந்து நிமிடங்களாக வயிற்றைப் பொத்திக் கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார்;.
அதன்பின் ஆச்சரியப்படுமளவிற்கு சுமார் அரை லீற்றர் அளவு சலம் போனது. ஏனக்கு அது மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. ஐந்து நாட்களாக எதுவும் குடிக்காமல் இருக்கும் ஒருவரால் இது எப்படிச் சாத்தியமாக முடியும்? அன்று வைத்திய நிபுணர் சிவகுமார் அவர்களிடம் இதுபற்றி மறக்காமல் கேட்டேன். அவர் எந்தப் பதிலுமே கூறாமல் மௌனமாக சிரிப்பை உதிர்த்துவிட்டுச் சென்றார்.
அன்று மத்தியானம் எமது இதயத்துக்கு மகிழ்ச்சியைத்தரும் ஒர் இனிய செய்தி எனது செவிகளில் விழுந்தபோது இனந்தெரியாத நிம்மதி என்னிடம் குடிவந்தது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவரகத்திலிருந்து ஓர் முக்கிய நபர் இன்று வரப்போகிறாராம். அவர் நமது அரசியல் பிரிவினருடன் திலீபனைப் பற்றிப் பேசப் போகிறாராம்….. என் பிரார்த்தனை வீண்போகாது திலீபனின் உயிர் காப்பாற்றப்படப்போகின்றது…… இந்தியத் தூதுவரகத்திலிருந்து யாராவது வருவதானால் நிச்சயமாக பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆலோசனைப்படிதான் வருவார்கள்….. அப்படி வருபவர்கள் உணர்ச்சி பொங்கும் தாய்க்குலத்தின் கண்ணீரைக் கண்டாவது இரங்கமாட்டார்களா?


