இம்சை புரிந்த இந்திய அரசுக்கு எதிராக அகிம்சை என்னும் ஆயுதத்தை கையில் ஏந்திய தியாகி திலீபன் ! 5 நாள் முழுவிபரம்
1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 19ம் திகதி இது திலீபனுடன் ஜந்தாம் நாள். வழக்கம் போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை. யாழ்ப்பாணகுடா நாடு முழுவதும் இருந்து தனியார் பஸ் வண்டிகளில் மக்கள் வெள்ளம் போல் வந்து நிறைய தொடங்கிவிட்டனர்.
இன்னும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறான். அவனால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்து கொட்டியது. மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாக சுழன்று கொண்டிருந்தது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கி்க் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனை பற்றிய செய்திகளே இடம்பெற்றிருந்தன. திலீபன் சோர்ந்து வருகிறார். மெழுவர்த்தியைப்போல அவர் சிறிது சிறிதாக உருகிக்கொண்டிருக்கிறார். அவரது சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகாரம் எடுக்காவிட்டால் நிலமை மேலும் மோசமாகி எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம்.
பத்திரிகைகளைப் படிக்கும்போது என் கைகளுடன் உள்ளமும் சேர்ந்து நடுங்கியது. திலீபன் என்ற ஒரு இனிய காவியத்தின் கடைசி அத்தியாயத்திற்கு வந்து விட்டதுபோல் பிரமை எனக்கு ஏற்பட்டது. அதற்கிடையில் ஓர் செய்தி காற்றோடு காற்றாக கலந்து வந்து என் செவியில் விழுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவைச்சேர்ந்த திலகர் அவர்கள் இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார் என்பதுதான் அது. புலிகளின் சார்பாக திம்பு பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்களில் திலகரும் ஒருவர். அப்படியானால் பிரதமர் ராஜுவ்காந்தியிடமிருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்குமா என்ற நப்பாசை என் மனதில். விசாரித்தபோது எந்த விதமான அழைப்பும் வரவில்லை வழமைபோல சாதாரண விசயங்களை கவனிப்பதற்காகத்தான் திலகர் போய் இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ஏன் கேட்டோம் என்றிருந்தது.