காவியத் தருணங்கள்! பார்த்தீனியம் நாவலில் தியாக தீபத்தின் நினைவுகள்!

0

சாரிசாரியாக வந்திறங்கிக்கொண்டிருந்த சனங்கள், ஒலிபெருக்கிகளின் மூலம் உணர்ச்சிமிகு வார்த்தைகளை இறைத்தபடி தெருக்களெங்ஙணும் திரிந்த வாகனங்கள், சீருடையணிந்த மாணவர்களது வரிசைகள், கட்டுக்கடங்காமல் பெருகிய கூட்டத்தை அணியம் செய்யமுடியாமல் திணறிக்கொண்டிருந்த தொண்டர்கள், விரக்தியும் ஆற்றாமையும் நிறைந்த விழிகளோடு அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்த போராளிகள், தாங்கமுடியாத உணர்வெழுச்சியால் வாசிப்பினிடையில் குரல் தளும்ப நிறுத்திப் பின் தொடர்ந்த கவிஞர்கள், திலீபனை இழந்துபோவோமோவென்ற ஏக்கத்தில் நடுங்கிய அவர்களுடைய கவிதைகள், பெருங்குரலெடுத்தும் விசும்பியும் அழுதுகொண்டிருந்த பெண்கள்… எல்லோரும், எல்லாம் மறைந்து அவ்விடத்தை இறுக்கமும் சீற்றமும் நிரப்பிவிட்டன.

எல்லாவற்றுக்கும் அடிநாதமாக, பன்னிரண்டு நாட்களாக பசியும் வலியும் தாங்கிச் சுருண்டு கிடந்த திலீபனின் உயிர்த்துடிப்பு ஓய்ந்துபோய்விட்டது.

அருமைநாயகம் விக்கித்துப் போனார். அவருடைய பிரார்த்தனைக்கு முருகன் செவிமடுக்கவில்லை. சிதறுதேங்காய்போல நம்பிக்கை சில்லுச்சில்லாகச் சிதறிப்போயிற்று. கற்பூரம்போல திலீபனின் உயிர் காற்றில் கரைந்துபோயிற்று.

‘கடைசி நாட்கள்ள பெடியன் கஷ்டப்பட்டுத்தான் போனான்… கண்ணுந் திறக்கேல்லையே… கடைசிக்கு முதல் நாள் உடம்பெல்லாம் உதறி உதறிப் போட்டுது. அடுத்தநாள் முடிஞ்சுது. பிறந்த பத்தாம் மாசத்திலையே தாயை இழந்துபோன பிள்ளை…’ இரக்கம் கண்ணீராகத் ததும்பியது.

“ஓ மரணித்த வீரனே…-உன்
ஆயுதங்களை எனக்குத் தா – உன்
சீருடைகளை எனக்குத் தா – உன்
பாதணிகளை எனக்குத் தா”

காரில் கட்டப்பட்ட ஒலிபெருக்கி உருக்கத்தை விதைத்துவிட்டு விரைந்தது. கடைக்காரக் கிழவர் தன் தோளில் கிடந்த சால்வையை எடுத்துக் கண்களைத் துடைத்துக்கொள்வதை அருமைநாயகம் கவனித்தார். வியர்க்கிறதோ… கடையடியில் நின்ற மரத்தின் செல்லமான தலையாட்டல்… காற்றுக்குக் குறைவில்லை… அவரும் திலீபனை நினைத்துக்கொள்கிறாராக்கும்…. அல்லது, முன்னரெப்போதோ புதைத்த பிணத்தைத் தோண்டியெடுத்து அழ இந்தச் சாவு காரணமாயிருக்கலாம். ‘ச்சாய்!அப்பிடி நினைக்கேலாது… எனக்கு எல்லாரிலையும் சந்தேகம்’ தன்னையே மறுதலித்தார். அந்த மனிதர் உண்மையிலேயே திலீபனை நினைத்துத்தான் அழுதிருக்கவேண்டும். சிவபெருமானுடைய முதுகில் விழுந்த பிரம்படி எல்லோர் முதுகுகளிலும் சுளீரிட்டாற்போல, திலீபனுடைய சாவு எல்லோருடைய முற்றங்களிலும் விழுந்திருக்கிறது.

பசி என்றால் என்னவென்று அவரறிவார். அது வயிற்றில் மூட்டும் நெருப்பை ஒருநாள்தானும் அவரால் தாங்கவியலாது. தண்ணீரை வார்த்து வார்த்து ஊற்றினாலும் அடங்காத தீ அது.

‘பன்னிரண்டு நாட்கள்… தண்ணீரும் அருந்தாமல்… ‘என்ரை ஐயனே! நீ எப்பிடி அப்பன் தாங்கினாய்?’

விழிகள் நனைய அவர் கோவில் இருந்த திசையை நோக்கி வணங்கினார். அன்று அவர் வணங்கியது நல்லூர்க் கந்தனையன்று.

“இருபத்து மூண்டு வயசு சாகிற வயதா?” உள்ளுக்குள் ஓலம் சுழன்றது.

‘குடல்கள் ஒன்றையொன்று முறுக்கிப் பிழிந்திருக்கும். உயிர் பிரியும் தருணத்தில் வேதனை உக்கிரம் கொண்டிருக்கும். ஒரு குழாயிலிருந்து நீர் ஒழுகுவதுபோல துளித்துளியாக உயிர் ஒழுகிப்போயிருக்கும். சனங்களுக்காக… இந்தச் சனங்களுக்காக…’

–தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவலிருந்து….தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல், இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலத்தையும் ஈழ விடுதலைப் போராளிகளின் அக்கால எழுச்சியையும் பதிவு செய்யும் மிக முக்கியமான நாவல். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நீதியின் பக்கம் நின்று எழுதிய நெடும் புதினம்.

Leave A Reply

Your email address will not be published.