கிளிநொச்சி கோரக்கன் கட்டுப்பகுதியில் உள்ள ஆலயத்திற்கு பூசை செய்வதற்கு வந்த ஆலய பூசகர் ஒருவர் சிறுவன் ஒருவனை கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்று அறையொன்றில் நாள் முழுவதும் பூட்டி வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந் நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவன் இன்று கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது,
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்திற்குட்பட்ட கோரக்கன்கட்டு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு பூசைக்காக வந்த பூசகர் அப்பகுதியில் உள்ள சிறுவன் ஒருவனை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்றுள்ளார் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் கிளிநொச்சியில் உள்ள வீடொன்றின் அறையினுள் நாள் முழுதும் பூட்டி வைத்து பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகியதன் பின்னர் குறித்த சிறுவனை வேறொருவருடன் அவரது சொந்த இடத்திற்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் நடந்த சம்பவத்தை அயலவர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் கண்டாவளைப் பிரதேச சிறுவர் நன்னடத்தை அதிகாரிக்கு சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுவனை கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இவ் விடயம் தொடர்பான விசாரணைகளை மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.