சோற்றுப் பார்சலுக்காக கடுமையாக மல்லுக்கட்டிய ஆண், பெண் அரசியல்வாதிகள் ! மானங்கெட்ட பிழைப்பு

0

கேகாலையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.அரநாயக்க மைதானத்தில் இடம்பெற்ற விழா ஒன்றில் சோற்று பார்சல் தொடர்பாக அந்தப் பகுதி பிரதேச சபையின் ஐ.தே.க உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் குறித்த பிரதேச சபையின் ஆண் உறுப்பினர் ஒருவர் பெண் உறுப்பினருக்கு சோற்றுப் பார்சலால் எறிந்துள்ளார்.தாக்குதலில் இலக்கான பிரதேச சபை உறுப்பினர் சுரங்கி தீபிகா சிறிவர்த்தன, அரநாயக்க மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் தலைமையில் அரநாயக்க பிரதேசத்தில் சிறிய தேயிலை தோட்டங்கள் வைத்திருப்போருக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் வவுச்சர் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இதன்போதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்நிகழ்வில் சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் 180 பேர் பங்கேற்றனர்.

சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி சபை அதிகாரியால் வழங்கப்பட்ட சோற்றுப்பார்சல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கும்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.சோற்றுப்பார்சல் தாக்குதலுக்குள்ளான பெண் உறுப்பினர் தன்னுடைய மூன்று பிரிவுகளை சேர்ந்த 30 பேருக்கு தேவையான சோற்றுப் பார்சலை பிரித்தெடுத்துள்ளார்.இந்த நிலையில், ஆண் பிரதேச சபை உறுப்பினர் அனுமதியின்றி பலாத்காரமாக அந்த பார்சல்களை எடுக்க முயற்சி செய்தபோது வாக்குவாதம் ஏற்பட்டு வன்முறையாக மாறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அரநாயக்க பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Leave A Reply

Your email address will not be published.