பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் முடிவு தமிழக அரசிடம் ஒப்படைப்பு ! உச்சநீதிமன்றம் அதிரடி ! வறண்டு போன வாழ்வில் ஒளியேற்றுமா தமிழக அரசு?
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்கும் முடிவை எடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக டெல்லி உச்சநீதிமன்றம் இன்று(06) உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவில் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஏழு பேரை விடுதலை செய்வதற்குத் தமிழக அரசு முடிவெடுக்க முழு அதிகாரமுள்ளது. அதற்கான பரிந்துரையை தமிழக ஆளுநரிடம் அளிக்க கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு விடுதலை செய்யப் பரிந்துரை அளிக்கும் பட்சத்தில் ஆளுநர் ஒரு முறை வேண்டுமானால் மீண்டும் பரிசீலனை செய்யுங்கள் என நிராகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால், மீண்டும் பரிந்துரையை அனுப்பும் பட்சத்தில் அதனைக் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டியது ஆளுநரின் கடமையாக உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரின் விடுதலை குறித்து 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு செய்திருப்பதாகவும், இது குறித்த தனது கருத்தை மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் தெரிவிக்காவிட்டால் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவித்தார்.
அடுத்த சில நாட்களில் ஏழு தமிழர்களின் விடுதலையை எதிர்த்து அப்போதைய மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதனால், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா? இல்லையா என்ற கேள்வியே தொற்றி இருந்தது.
இதன் காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமுமில்லை என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வருத்தம் தெரிவித்து வந்தனர்.
தற்போது அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை இன்றைய தினம் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவின் மூலம் ஏற்பட்டுள்ளது.