யாழில் இராணுவத்தினரிடம் உள்ள சில இடங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை விடுவிக்கப்படவுள்ளன. குறித்த தகவலை யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
குறித்த மாவட்டத்தில் மயிலிட்டிக் கலைமகள் வித்தியாலயம், ஆனைக்கோட்டை கூழா முறிப்பில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள காணி உட்பட சில பிரதேசங்கள் எதிர்வரும் வியாழக்கிழமை மீளக் கையளிக்கப்படவுள்ளன.யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் பாவனைக்குரிய சில இடங்களை விடுவிக்க வேண்டும் என்று இராணுவத்தினரிடம் கோரியிருந்தோம்.
அவற்றில் 4 இடங்களை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.வசாவிளான் மற்றும் குரும்பசிட்டியில் கூட்டுறவுச் சங்கக் கிளைக் கட்டடம், கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடம் என்பனவும் விடுவிக்கப்படவுள்ளன.
அவற்றை மீளக் கையளிப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்டக் கட்டளைத் தளபதி உறுதிப்படுத்தியுள்ளார்.இதேவேளை, குறிப்பிட்ட இடம் எம்மிடம் கையளிக்கப்பட்டதும் அவை உரியவர்களிடம் கையளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.