அவர்கள் நடக்கட்டும்! த. செல்வா

0

அவர்கள் நடக்கின்றார்கள்
வெறி கொண்டெம்மை அழித்தவனின் கறைபடிந்த தெருக்களை நோக்கி நடக்கின்றார்கள்

மாடப்புறாக்களும்
மணிவண்ணக் கீதங்களும் இசைத்த தெருக்களை
சிவப்பு மஞ்சள்க் கொடிகளும்
கார்த்திகைத் திங்களும் நெருங்க
கல்லறைகளுக்கு பல ஆயிரம் கண்களும்
காது களும் செவியும் வாயும் நீள அவர்கள் நடக்கின்றார்கள்

நடப்பது ஒன்றும் இலகுவல்ல
வாழ்வின் தீராத பக்கங்களை எழுதிச் செல்லும் பிரமிளின் இறகைப் போல் பறப்பது ஒன்றும் எளிதல்ல

அவர்கள் பறப்பதற்காய் நடக்கிறார்கள்
சுதந்திரமாய் பறக்க முடியா சிறகறுந்த சிறை மாந்தர்களுக்காய் பறக்கிறார்கள்

எழு தமிழ எழு
நீயும் கொஞ்சம் நட
உன் அக்காளும் அண்ணனும் தம்பியும் தங்கையும் தகப்பனும் தாயும் காணாமல்ஆக்கப்பட்ட நிலத்தின் சிரித்த படி ஒரு பிடி சோற்றையேனும்உண்பாயா சொல்

இல்லை நீ உண்ணமாட்டாய்
சாவீட்டருகே மணவீடு இருப்பது சகஜமூன்றுரைக்க
நீ என்ன கருணாநிதியா சொல்

இல்லை
இல்லவே இல்லை
கரிகாலன் காட்டிய திசையினில்
தீட்டிய வேட்கையைச் சுமக்கும் தீப்பறவைகள்
நீயும் ஏன் பறக்கக் கூடாது சொல்

அவர்கள் நடக்கிறார்கள்
இவர்கள் நடிக்கிறார்கள்

பாராளுமன்றங்களில் பால்ச்சோறு தின்று
பௌவிய மொழி உரைத்து
கிளிப்பிள்ளை போல் கிலிபிடித்து புலிக்கதை சொல்லிக் கிளு கிளுப்புக்காட்டும் கோடாலிப் பாம்புகளின் பூமியில்
அவர்கள் நடக்கத்தானே வேண்டும்
நாளை என்பது யாரிடம்
நம்பிக்கையில் அம்பு பாய்ச்சியவன்எவ்விடம்

நாம் நலிந்தவர்களல்ல
அவர்கள் நடக்கட்டும்
நாளை ஒரு வேளை வாசல் திறக்கலாம்
மனங்கள் பூக்கலாம்
சிறை மாந்தருக்கு சிறகு முளைக்கலாம் எனில்
அவர்கள் நடக்கட்டும்.

Leave A Reply

Your email address will not be published.