ஈழப்போரில் இறந்த அம்மாவிடம் பால் குடித்த ராகிணி… இப்போது எப்படி இருக்கிறாள்? விகடனில் தீபச்செல்வன்

0

ஈழப்போரில் இறந்த அம்மாவிடம் பால் குடித்த ராகிணி… இப்போது எப்படி இருக்கிறாள்?

இலங்கையில் 2008-09-ம் ஆண்டுகளில் நடந்த போரில் கொல்லப்பட்டவர்கள் ஏராளம். உடல் உறுப்புகளை, உறவுகளை, உடைமைகளை இழந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சம். போர் நடந்து 10 ஆண்டுகள் ஆனபோதும், அந்தத் துயரத்தின் வலியைச் சுமந்துவாழ்பவர்களின் நிலையை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. போர் நடந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்து வந்த காட்சிகள் நம் மனத்தை உலுக்கி எடுத்தன; வற்றாத கண்ணீரை வரச்செய்தன; மாபெரும் குற்றஉணர்ச்சிக்குள் தள்ளின. அதிலும், தாய் மாண்டது தெரியாமல், அவள் மார்பில் பால் குடிக்கும் 8 மாதக் குழந்தையின் புகைப்படம், இதுபோன்ற நிலை உலகின் எந்தக் குழந்தைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என மனம் அரற்றியது. அந்தக் குழந்தையின் பெயர், ராகிணி. இப்போது அவள் எப்படி இருக்கிறாள். ஈழப்போர் காலத்தின் அவலங்களைத் தன் எழுத்தில் வடித்து, உலகம் முழுவதும் பரவச் செய்துவருபவரும், கவிதை, சிறுகதை, கட்டுரை உள்ளிட்ட வடிவங்களில் தம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உரக்க எழுதிவருபவருமான, ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனிடம் கேட்டோம்.

“இலங்கைத் தீவில் சிறந்த கல்வி அறிவுகொண்டவர்களாக ஈழத்தமிழர்களே வரலாற்றில் இடம்பிடித்துள்ளனர். பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில், அன்றைய சிலோன் மக்கள் சார்பில் ஒரு பிரதிநிதியாக சிறந்த கல்வியறிவுகொண்ட சேர் பொன் இராமநாதனே இருந்துள்ளார். சேர் பொன் இராமநாதன், சென்னை பிரசின்டசி கல்லூரியில் பயின்றவர். சுதந்திரத்துக்குப் பிந்தைய காலத்தில் ஈழத்தமிழ் மக்களின் கல்வியை அழிக்கச் சிங்கள அரசுகள் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்தன.

தனிச் சிங்களச் சட்டம், கல்வித் தரப்படுத்தல் சட்டங்களுடன், போர்க் காலத்தில் பள்ளிகள்மீது குண்டுகளை வீசி அப்பாவி மாணவர்களைத் தொகை தொகையாகக் கொன்றழித்தன. பள்ளிச் சீருடைகள் குருதியால் சிவப்பாகிவிட, சிதைக்கப்பட்ட குழந்தைகளையும் சிதைக்கப்பட்ட பள்ளிகளையும் ஈழ மண் ஒருபோதும் மறவாது. முள்ளிவாய்க்கால் இன அழிப்பு யுத்தத்தில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று பாராமல், போர் தவிர்ப்பு வலயங்களில் பதுங்கியிருந்த மக்கள்மீது தாக்குதல் நடத்தியமைக்குச் சாட்சியாக இருக்கிறாள், முல்லைத் தீவைச் சேர்ந்த ராகிணி. அண்மைய நாள்களில் இலங்கையில், கவனத்தை ஈர்க்கும் சாதனை சிறுமியாக ராகிணி வலம்வருகிறாள். இலங்கையில் ஐந்தாம் வகுப்பில் வறிய மாணவர்களின் நிதி ஊக்குவிப்புத் தொகைக்காக புலமைப் பரிசில் பரிட்சை நடப்பதுண்டு. அதன் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதில், தமிழ் மாணவர்கள் இருவர், 200 புள்ளிகளுக்கு 198 பெற்றுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திகழ்ஒளிபவன் மற்றும் நதி. சிங்கள மாணவர்கள் 199 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். எல்லாப் பரிட்சைகளிலும் ஒரு புள்ளியால் சிங்கள மாணவர்கள் உயரும் கல்வி ரகசியம்தான் இன்னமும் புரியாதுள்ளது. இதைப்போல கிளிநொச்சியைச் சேர்ந்த தேனுசன் 196 புள்ளிகளையும், கதிர்நிலவனும் தர்மிகனும் 195 புள்ளிகளையும் பெற்றுள்ளனர். இவர்களுக்கு மத்தியில், 169 புள்ளிகளைப் பெற்றிருக்கிறாள் முல்லைத் தீவின், முள்ளியவளை கலைமகள் வத்தியாலய மாணவியான ராகிணி. ஆனால், எல்லோரையும் பின்தள்ளி தன்னைப் பேசுபொருள் ஆக்கியுள்ளாள். ஏனெனில், ராகிணி முள்ளிவாய்க்காலின் சாட்சி. முள்ளிவாய்க்காலின் நம்பிக்கை. முள்ளிவாய்க்கால் யுத்தம் நடந்தபோது, இலங்கை அரச படைகள் நடத்திய கோரத் தாக்குதலில் தனது கை ஒன்றை இழந்தாள் ராகிணி.


அது மாத்திரமல்ல, அவளின் தாயாரும் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட, தந்தையும் படுகாயமுற்றார். தமிழினம் மாத்திரமல்ல, மனசாட்சி உள்ள எவராலும் மறக்கமுடியாத முள்ளிவாய்க்கால் காட்சிகளில் ஒன்று, இறந்த தாயின் மார்களில் குழந்தை பால் குடித்துக்கொண்டிருந்தது. ஆம், தனது தாயார் கொல்லப்பட்டு இறந்துபோனதை அறியாத ராகிணி, தாயிடம் பால் குடித்துக்கொண்டிருந்தாள். அப்போது அவள் பிறந்து 8 மாதங்களே ஆகியிருந்தன.

ராகிணியை அவரது அப்பம்மாதான் பாதுகாவலாக வளர்த்துவருகிறார். பிரத்தியேக வகுப்புகள் எதற்கும் செல்லாமல், பாடசாலை கல்வியுடனே இந்தப் பெறும்பேற்றைப் பெற்றிருக்கிறாள் ராகிணி. பிரத்தியேக வகுப்புகளும் இன்னபிற வசதிகளும் கிடைத்திருந்தால், இருநூற்றுக்கு 200 புள்ளிகளைப் பெற்றிருப்பாள். தனக்குக் கற்பித்த ஆசிரியர்களைப்போலவே தானும் ஓர் ஆசிரியராக உருவாகி, எதிர்காலச் சந்ததிக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்கிறாள் ராகிணி. முள்ளிவாய்க்காலில் மீண்டெழுந்த நட்சத்திரம் இவள். போர் தின்ற பல்லாயிரம் ஈழக் குழந்தைகளின் சார்பிலான நம்பிக்கை விதை இவள்” என்கிறார் தீபச்செல்வன்.

-வி.எஸ்.சரவணன், ஆனந்தவிகடன்.

Leave A Reply

Your email address will not be published.