சர்கார் கதை தொடர்பான பிரச்னையில் வருண் ராஜேந்திரனுக்கு சாதகமான தீர்வு
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும், ‘சர்கார்’ கதைப் பிரச்னையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் இடையே ஏற்பட்ட சமரசத்தை அடுத்து பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. படம் துவங்கும் முன் ‘கதை நன்றி’ எனக் குறிப்பிட்டு வருண் ராஜேந்திரனின் பெயரும் வெளியிடப்படுகிறது.
முன்னதாக இந்த வழக்கு குறித்துக் கொஞ்சம்..
விஜய் நடித்திருக்கிற ‘சர்கார்’ படத்தின் கதை தன்னுடைய ‘செங்கோல்’ கதையே’ என்றும், அதை விசாரித்து, அந்தக் கதைக்கான உரிமை, அங்கீகாரம் தனக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உதவி இயக்குநர் வருண் என்கிற ராஜேந்திரன் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் கடிதம் தந்தார்.
சங்கத் தலைவர் கே.பக்யராஜ் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் பேசி ‘சர்க்கார்’ மூல ஸ்க்ரிப்ட்டை வாங்கி இரண்டு கதைகளையும் ஒப்பிட்டு பார்த்து, ஒரேமாதிரியாக உள்ளதாக கடிதம் தந்தார். ஆனால், அதற்கு சம்மதம் தெரிவிக்காத முருகதாஸ், பிரச்னையை நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்வதாகக் கூற பிரச்னை பெரிதானது. வருண் ராஜேந்திரன் இதை வழக்காக பதிவு செய்ய, 30ம் தேதி (இன்று ) வழக்கு விசாரணைக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து பிரச்னை கோர்ட்டுக்கு வர தற்போது, இருதரப்பும் பேசியதில், மேற்கண்ட சமரசம் எட்டப்பட்டு பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. வருண் ராஜேந்திரனுக்கு படத்தின் டைட்டிலில் நன்றி என சொல்வதாகவும் முருகதாஸ் தரப்பு, வருண் ராஜேந்திரனிடம் பேசியதையொட்டி சமரசம் ஏற்பட்டுவிட்டது.
சர்கார் திரைப்படம் தீபாவளியன்று வெளியாக இருக்கிறது.