டில்லியை அடுத்து உள்ள குர்கானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து பலர் உயிரை காப்பாற்றிய பெண், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
டில்லி அருகேயுள்ள குர்கான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம்(அக்.இ7) நள்ளிரவு 2 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அருகில் உள்ள நகரில் இருந்து 45 நிமிடங்களுக்கு பின் வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதற்கு முன்னதாக, 5வது மாடியில் குடியிருந்த ஸ்வாதி கார்க்(32) என்ற கட்டட வடிவமைப்பாளர் ,தீவிபத்து அறிந்தஉடன், ஒவ்வொரு வீடாக சென்று, அங்கு குடியிருந்தவர்களை, உஷார்படுத்தினார். இதனால், அவர்கள் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி மொட்டை மாடிக்கு சென்று உயிர் தப்பினர்.
ஆனால், நீண்ட நேரமாகியும் ஸ்வாதி மாடிக்கு வரவில்லை. இதனையறிந்த அக்கம்பக்கத்தினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக வீரர்களும் தேடி பார்த்தனர். அப்போது, 10 வது மாடியில் பூட்டப்பட்ட கதவுக்கு அருகே ஸ்வாதி இறந்த நிலையில் கிடந்தார். கதவை திறக்க முடியாமல், ஸ்வாதி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். ஸ்வாதியின் கணவர், தனது குழந்தையுடன் மாடிக்கு சென்று உயிர் தப்பினார்.