போர்க்காலத்து விளக்குகள்! எங்கள் கதைகள்!

0

அநேகம், பணக்காற(ர)ர் வீடுகளிலும், பள்ளியில் பிள்ளைகள் படிக்கிற வீடுகளில் சிலவற்றில், சில மணிநேரமும் மாத்திரம், அரிக்கன் ‘லாம்பு’கள் / ‘லாந்தர்’கள் ஒளி வீசும். காரணம், மருந்துக்கு மாத்திரம் கிடைக்கிற திரவியங்களுள் மண்ணெண்ணெயும் ஒன்று.

புயல், கடுங்காற்றுக்கும் தாக்குப்பிடிக்கக் கூடியதென்ற, ஆங்கிலக் காரணப் பெயரோடு வந்த ‘ஹறிக்கென் லன்ரெர்ன்’ (Hurricane Lantern) ஐ அரிக்கன் லாம்பு/லாந்தர் ஆக்கிய பெருமை, எங்கள் ஊரின் தூய தமிழ் வாய்களுக்குச் சொந்தம். லாம்பு விளக்குகளில், காற்று, சுவாலையோடு சேட்டை செய்யாமலிருக்க, சிமினியும் (Chimney), கையாள இலகுவாக கைப்பிடியும் இருப்பது அவற்றின் சிறப்பு. (மேசை லாம்புகளிற்குக் கைபிடி இல்லை) குறிப்பாக இவை, வீட்டிலிருந்து சற்றுத் தள்ளியே இருக்கிற கிணற்றடிக்கோ, கழிப்பறைக்கோ இரவில் செல்ல பெரிதும் கைகொடுக்கும். அல்லது கைவிளக்கோடு கூடவே தீப்பெட்டியும் கையுமாய்ச் செல்வது கட்டாயம்.

கைவிளக்குகளில் கைதேர்ந்தவர்கள் நாங்கள். (லாம்புகளோடு, ஒப்பிடுகையில் கைவிளக்குகள் எண்ணெய் குடிப்பது குறைவு.) பித்தளை மற்றும் வேறு உலோகக் கைவிளக்குகளை விடவும், எங்கள் உள்ளூர் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பான போத்தல்/குப்பி விளக்குகளுக்கு எங்கள் வாழ்க்கையில் பெரும்பங்குண்டு. பழைய திரவ மருந்துப் போத்தல்கள், ‘ஜாம்’ போத்தல்களுக்கு ‘சைக்கிள் ரியூப்’ வால்(வ்)கட்டை பொருத்தி, கடதாசி அல்லது துணியில் திரி இட்டு இருளை விரட்டியவர்கள் நாங்கள். தேங்காயெண்ணெய் விளக்குகளின் ஒளிர் காலத்தைக் கூட்டுவதற்காக, அதனுள் உப்பு அல்லது பஞ்சிடுகிற வழக்கம், எங்கள் உள்ளூர் அவதானிகள் / ஆய்வாளர்களின் பரிந்துரை.

இரவுகளில் கைவிளக்கு அணைந்து விடாமல் பார்ப்பது கையாளுகிற அனைவரதும் கடமை. அதற்கான எம் பிரயத்தனங்களும் போராட்டங்களும், அவர்களைப் போலவே, அந்தப் பேய்க் காற்றுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.

கைவிளக்கில், படிப்பதாய்ப் பாசாங்கு செய்து கொண்டே குட்டித்தூக்கம் போடுகிறவர்களை, முடி கருகிய வாசனை முகர்ந்து, ‘குசினி’யிலிருந்து வரும், ‘எரும மாடுகள்’ என்கிற அம்மாவின் கூக்குரல், திடுக்கிட்டெழச் செய்யும். ஒருமுறை கள்ளம் பிடிபட்ட பிறகு, அடிக்கடி அப்பாவின் ரோந்து நடக்கும். சிலவேளை காதுகளும் கிழியும்.

ஓலைக்குடிசைகளை, ஒளியூட்ட தலைமாட்டில் வைத்த, குப்பி விளக்குகள் குடை சாய்ந்து, சிலரின் விலை’யில்லா’ உயிர் குடித்ததும், பலரின் வாழ்வை இருளாக்கியதுமான பல கதைகளுக்கும் கூட சொந்தக்காரர்கள் நாங்கள் தான். …

இது எங்கள் கதை. கூரையே இல்லாத வீடுகளில் வாழ்ந்தவர்களினதும், வீடுகளே இல்லாமால் வாழ்க்கையை வாழ்ந்தவர்களினதும் இதுபோன்ற பல கதைகளுக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள்.
உங்கள் கற்பனைகளால் அவ்வளவு எளிதில் காட்சிப்படுத்திவிட முடியாத கதைகள்.

சொல்ல முடியாத எங்கள் கதைகள் சொல்லி முடியாது…(தொடரும்)

-கிருபன்

Leave A Reply

Your email address will not be published.