மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி ! இந்திய அணி சிறப்பான தொடக்கம்

0

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சிறப்பான தொடக்கம் கண்டுள்ள இந்திய அணி முதல் நாளில் 4 விக்கெட்டுக்கு 364 ரன்கள் குவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் சிறப்பான தொடக்கம் கண்டுள்ள இந்திய அணி முதல் நாளில் 4 விக்கெட்டுக்கு 364 ரன்கள் குவித்துள்ளது. பிரித்வி ஷா சதமும், புஜாரா, கோலி அரைசதமும் விளாசினர்.

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் புதுவரவாக மும்பையை சேர்ந்த 18 வயதான பிரித்வி ஷா இடம் பிடித்தார். அவர் இந்திய அணியின் 293-வது டெஸ்ட் வீரர் ஆவார். அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவுடன் 3-வது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் அங்கம் வகித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஜாசன் ஹோல்டர் காயத்தால் கடைசி நேரத்தில் விலக நேரிட்டது. துபாயில் பயிற்சி மேற்கொண்ட போது கணுக்காலில் காயமடைந்த ஹோல்டர், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் ஒதுங்கினார். அவருக்கு பதிலாக அறிமுக வீரராக வேகப்பந்து வீச்சாளர் ஷெர்மான் லீவிஸ் சேர்க்கப்பட்டார். கிரேக் பிராத்வெய்ட் கேப்டன் பொறுப்பை ஏற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் கெமார் ரோச் தனது பாட்டி மரணம் அடைந்ததால் தாயகம் திரும்பியுள்ளார். அவரது துக்கத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கையில் கருப்பு அட்டை அணிந்து விளையாடினர்.

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி லோகேஷ் ராகுலும், புதுமுக வீரர் பிரித்வி ஷாவும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். அதிர்ச்சி அளிக்கும் வகையில் முதல் ஓவரிலேயே லோகேஷ் ராகுல் (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.

இதன் பிறகு பிரித்வி ஷாவுடன், புஜாரா கைகோர்த்தார். ‘இளம் புயல்’ பிரித்வி ஷா பதற்றமின்றி அதிரடியாக விளையாடினார். கீமோ பாலின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை சாத்தினார். கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் ரன்களை மளமளவென திரட்டிய அவர், பந்தை மைதானத்தின் நாலாபுறமும் ஓடவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார். ஆடுகளத்தன்மை பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காத நிலையில் இருவரும் பேட்டிங்கில் அமர்க்களப்படுத்தினர். இதனால் ஸ்கோர் ஒரு நாள் போட்டி போன்று துரிதமாக நகர்ந்தது. உணவு இடைவேளையின் போது இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்திருந்தது.

மணிக்கு அதிகபட்சமாக 149 கிலோமீட்டர் வேகத்தில் பவுலிங் செய்த ஷனோன் கேப்ரியல் மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சற்று நெருக்கடி கொடுத்தார். மற்றவர்கள் ஏதோ கடமைக்கு பந்து வீசியது போன்றே தெரிந்தது.

நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா 99 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே சதத்தை சுவைத்த இளம் வீரர் என்ற சிறப்பை பெற்றார். மறுமுனையில் மூன்று இலக்கத்தை தொடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா துரதிர்ஷ்டவசமாக 86 ரன்களில் (130 பந்து, 14 பவுண்டரி) விக்கெட் கீப்பர் டாவ்ரிச்சிடம் கேட்ச் ஆனார். புஜாரா-பிரித்வி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 206 ரன்கள் எடுத்தனர். அடுத்து கேப்டன் விராட் கோலி நுழைந்தார்.

அனுபவமற்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை துவம்சம் செய்த பிரித்வி ஷா 134 ரன்களில் (154 பந்து, 19 பவுண்டரி) சுழற்பந்து வீச்சாளர் தேவேந்திர பிஷூவின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதன் பின்னர் 4-வது விக்கெட்டுக்கு இறங்கிய துணை கேப்டன் ரஹானே தனது பங்குக்கு 41 ரன்கள் (92 பந்து, 5 பவுண்டரி) எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

முதல் நாளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும் (137 பந்து, 4 பவுண்டரி), விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 17 ரன்களுடனும் (21 பந்து) களத்தில் உள்ளனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.