யாழ்ப்பாணத்தில் தூய தமிழில் பஜனை பாடி அசத்திய வெள்ளைக்காரப் பெண்கள் ! பரவசத்தில் ஆனந்த கண்ணீர் வடித்த பக்தர்கள்! வீடியோ உள்ளே

0

கனடா இந்துசமயப் பேரவையின் பீடாதிபதியும், குப்பிளான் மண்ணின் மைந்தருமான சிவமுத்துலிங்கம் ஆற்றும் பணியை நினைவுபடுத்திச் சுவிற்சர்லாந்து பூரண ஆச்சிரமத்தால் வெளியிடப்பட்ட ‘சைவத்தமிழ் திருமுறையழகு’ மலர் அறிமுக விழா நேற்றுச் சனிக்கிழமை(29) பிற்பகல் யாழ்.குப்பிளான் தெற்கு சிவபூமி ஞான ஆச்சிரம முன்றலில் சிறப்பாக இடம்பெற்றது.

இதன் போது சுவிற்சர்லாந்து பூரண ஆச்சிரமத்தினர் வழங்கிய விசேட பஜனை நிகழ்வு முதல் நிகழ்வாக அரங்கேறியது.

சுவிற்சர்லாந்து பூரண ஆச்சிரமத்தின் குருமகா சந்நிதானம் பூரணயோகி தலைமையில் இடம்பெற்ற இந்தப் பஜனை நிகழ்வில் வெள்ளைக்காரப் பெண்கள் சேலை அணிந்தும், வெள்ளைக்கார ஆண்கள் வேட்டி அணிந்தும் சைவசமய கலாசார நெறிமுறைகளுக்கமைய கலந்து கொண்டதுடன் தூயதமிழில் தெய்வீகப் பஜனைப்பாடல்களைப் பண்ணுடன் ஓதிய காட்சி அங்கு கூடியிருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதுடன் மெய்மறக்கவும் வைத்தது.

குறிப்பாகத் தெய்வீகப் பக்திப் பாடல்களை ஓதும் போது வெள்ளைக்காரப் பெண்கள் தம்மை மறந்து பரவச நிலையில் ஆடிய காட்சி பக்தியின் உச்சமாக அமைந்திருந்தது. இவர்களது பஜனை நிகழ்வால் பெரிதும் ஈர்க்கப்பட்ட பார்வையாளர்கள் தமது கவலைகளை மறந்து ஒன்றித்துப் போயிருந்ததுடன், சிலர் ஆனந்தக் கண்ணீரும் வடித்தனர்.

எங்களுடைய மொழி, பண்பாடு, கலாசாரம் மற்றும் எங்களுடைய சமயத்தின் ஆழ, அகலங்களைப் பற்றியோ ஆழமாக அறிந்து கொள்ளாத ஒரு சமூகத்திலிருந்து வந்த ஒரு இனக் குழுமம் எங்களுடைய சைவசமயத்தின் மீது இப்படியொரு நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என்பதை எண்ணும் போது மகிழ்ச்சியாகவிருக்கிறது.

சைவத்தமிழ்ப் பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும், கந்தபுராண கலாசாரத்திற்கும் பெயர் போன யாழ்ப்பாண மண் இன்று தனது தனித்துவத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கின்ற தற்போதைய சூழ்நிலையில் நேற்று குப்பிளானில் இடம்பெற்ற பஜனை நிகழ்வு எங்களுக்குப் பல்வேறு செய்திகளை உணர்த்துவதாகவுள்ளது.

எங்களுடைய சைவசமயத்தின் பெருமைகளை உணர்ந்து அதன் நெறிமுறைகளை வேற்று இனத்தவர்கள் பின்பற்றும் நிலையில் இனியாவது “நாம் சைவர்கள்” என்ற உணர்வுடன் விழித்துக் கொள்ள வேண்டும்.சினிமாவுக்குள்ளும், சின்னத் திரைகளுக்குள்ளும், நவீன தொடர்பாடல் சாதனங்களுக்குள்ளும் தொலைத்துவிட்ட எங்கள் சந்தோசங்களை மீட்டெடுப்போம்.

மெல்ல மெல்ல அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எங்கள் சமய, கலை, கலாசார அடையாளங்களை மீட்டெடுக்க சைவசமயிகளாகிய நாமனைவரும் ஒன்றிணைவோம். மேன்மை கொள் சைவநீதி உலகமெல்லாம் விளங்க சபதமெடுப்போம்.

 

Leave A Reply

Your email address will not be published.