வீட்டுக்கடனைப் பெற்றுக் கொள்வதற்காக வீதியில் இறங்கி போராட்டம் நடத்திய குடும்பம் ! வவுனியாவில் சம்பவம் ! படங்கள் உள்ளே

0

வவுனியாவில் இன்று காலை 8.30 மணியளவில் குடும்பம் ஒன்று வீட்டுக்கடன் வழங்கும்போது வீட்டுத்திட்டம் என்கின்ற பெயரில் மக்களுக்கு வீண் சட்டங்கள் திணிக்கப்படுகின்றன. மக்கள் வாழ்வதற்கு வீடா? அல்லது அரசாங்க விளம்பரத்திற்கு வீடா? எனத் தெரிவித்து காட்சிப்படுத்தப்பட்ட பதாதையுடன் வவுனியா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினரின் அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

இவ்விடயம் குறித்து வவுனியா அண்ணாநகரில் வசித்து வரும் குடும்பத்தலைவர் தெரிவிக்கும்போது, அண்ணாநகர் பகுதியில் நான்கு பிள்ளைகளுடன் காணி ஒன்றில் வசித்து வருகின்றேன். எனது தொழில் சாரதி கடந்த 20 வருடங்களாக வீட்டுத்திட்டம் இன்றி இடம்பெயர்ந்து வசித்து வருகின்றேன். இந்நிலையில் வீடமைப்பு அதிகார சபையினரிடம் வீட்டுக்கடன் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வழங்கியிருந்தேன். தற்போது அத்திவாரம் வெட்டப்பட்ட நிலையில் எனது கடன் விண்ணப்பம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காரணம் கேட்டால் ஜந்து இலட்சம் வீட்டுக்கடனுக்கு 500சதுர அடி வீடு பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் எனது அத்திவாரத்தின் அளவு 600சதுர அடியைக் கொண்டுள்ளது. எனவே தேசிய வீடமைப்பு அதிகாரசபையினரின் திட்டத்திற்குட்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

எனது வீட்டிற்கு மேலதிகமாக வரும் செலவுகளை நான் பொறுப்பேற்றுக்கொள்கின்றேன். எனக்கு வழங்கவேண்டிய வீட்டுக்கடன் பணத்தை தருமாறு பல தடவைகள் கோரியிருந்தேன் வழங்கவில்லை இதையடுத்தே இன்று காலை குறித்த அலுவலகத்திற்கு முன்பாக தனது குடும்பத்தினருடன் போராட்டம் மேற்கொண்டார்.

அங்கு வருகை தந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் போராட்டம் மேற்கொண்ட குடும்பஸ்தருடன் கலந்துரையாடியதுடன் வவுனியா தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் திருமதி வீ. எம். வீ. குரூஸ்சுடன் அலுவலகத்தில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது மாவட்ட முகாமையாளர் தெரிவிக்கும்போது, வீட்டுக்கடன் வழங்கும்போது கடன் உடன் படிக்கை விண்ணப்பப்படிவத்தில் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது 500 சதுர அடியில் வீடு அமைக்கப்படவேண்டும். அதற்கு உடன்படுகின்றேன் எனத் தெரிவித்து ஒப்பமிடப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த வீடு 600 சதுர அடியைக் கொண்டுள்ளது எனவே எமது சட்டத்திற்கு வீடு அமையவில்லை. தற்போது இவருக்கு வழங்க நடவடிக்கை மேற்கொண்டால் இவரைப்பார்த்துவிட்டு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது தானே எமக்கும் வழங்கவேண்டும் என்று பலரும் என்னிடம் வந்து இதே நடைமுறையில் தமக்கு வீட்டுக்கடன் வழங்குமாறு தமது கோரிக்கைகளை முன்வைப்பார்கள் எனவே அதை வழங்க முடியாது.

கடந்த வருடம் அவ்வாறு பல விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டபோதிலும் இன்று வரையில் பல வீடுகள் முழுமை பெறவில்லை கட்டி முடிக்கப்படவில்லை பல வீடுகள் பாதியில் நிற்கின்றதை அவதானிக்க முடிகின்றது. இவ்வருடம் இவ்வாறான திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கு மேற்பட்ட பல வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எமக்கு வழங்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே எம்மால் வீட்டுக்கடன் வழங்க முடியும்.

இவரின் கோரிக்கை குறித்து கொழும்பு தலைமை அலுவலகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்று இரு தினங்களில் பதில் பெற்றுத்தருவதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இரு பகுதியினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டு போராட்டம் மேற்கொண்ட குடும்பஸ்தர் தனது போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.