100 பயணிகளைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த விமான அதிகாரி !

0

இந்தோனேசியாவில் சுலவேசி தீவில் வெள்ளிக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் பலர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தங்களின் உயிரைப் பணயம் வைத்து ஏராளமான மக்களைக் காப்பாற்றிய நாயகர்கள் மற்றும் நாயகிகள் இந்தோனேசிய மக்களால் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களில் ஒருவர்தான் 21 வயதான அந்தோனியஸ் குணவன். விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியான அந்தோனியஸ் சுமார் நூறுக்கும்மேற்பட்ட விமானப் பயணிகளைக் காப்பாற்றி தன்னுயிரை இழந்திருக்கிறார் என்று இந்தோனேசியாவின் விமானத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது  “வெள்ளிக்கிழமை மாலை சுலவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, பலுவிலுள்ள அல்-ஜஃப்ரி விமான நிலையத்திலுள்ள விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையில் ஒரே ஒரு அதிகாரியாக இருந்திருக்கிறார். நிலநடுக்கம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து அதனை உணர்ந்த விமான நிலையத்தின் பிற அதிகாரிகள் அங்கிருந்து ஓடிச் சென்றனர்.

ஆனால் அந்தோனியஸ் அப்போது வானில் பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த விமானம் (Batik Air Flight 6321) சரியாக தரைத்தளத்தில் இறங்குகிறதா?.. என்று கவனித்திருக்கிறார்.

நிலநடுக்கத்தை உணர்ந்தும் பயணிகளின் பாதுகாப்பே முக்கியம் என்று தொடர்ந்து தன் பணியைச் செய்திருக்கிறார் அந்தோனியஸ். பின்னர் விமான சரியான பாதையில் சென்றதை உறுதி செய்த அவர். கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டத்தை தொடர்ந்து நான்காவது மாடியிலிருந்து குதித்திருக்கிறார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் மரணமடைந்தார்.

அந்தோனியஸ் குணவனின் உயிர்த் தியாகத்தைப் பாராட்டி அரசு மற்றும் மக்கள் தரப்பில் அவருக்கு பல இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.