மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்டபட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் விடுவிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளுக்கு செல்லும் பிரதான வீதியை சிறிலங்கா கடற்படையினர் மீண்டும் இடைமறித்து தடைகளை ஏற்படுத்தியுள்ளனர்.
சிறிலங்காவின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ச பதவியேற்ற நிலையிலேயே சிறிலங்கா கடற்படையினர் கடந்த ஆண்டு விடுவித்த பொதுமக்களின் காணிகளுக்கு மக்களை செல்லவிடாது முற்கம்பி வேலிகளைப் போட்டு தடைகளை ஏற்படுத்தியிருக்கின்றனர். சிறிலங்கா கடற்படையினரின் இந்த நடவடிக்கைகளால் அடுத்து
என்ன நடக்கப்போகின்றதோ என்று தெரியாது மன்னார் முள்ளிக்குளம் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் – முள்ளிக்குளம் கிராம மக்கள் 2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஸ்ரீலங்கா கடற்படையினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நிலையில், தொடர் போராட்டங்களை மேற்கொண்டவந்த முள்ளிக்குளம் மக்களுக்கு 77 ஏக்கர் காணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது.
எனினும் தமது சொந்தக் கிராமத்திற்கு மீள திரும்ப முடியாது முள்ளிக்குளம் தேவாலயத்தில் தங்கியிருந்த மக்கள் முள்ளிக்குளம் பங்குத்தந்தையின் உதவியுடன் கடந்த ஜீலை 16 ஆம் திகதி முதல் தமது பூர்வீகக் காணிகளை துப்பரவு செய்து தற்காலிக கூடாரங்களை அமைத்து குடியேறி வந்தனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் (30.10.2018) விடுவிக்கப்பட்ட காணியொன்றின் வேலிகளை அமைத்துக்கொண்டிருந்த குடும்பத்தை அச்சுறுத்தியிருந்த சிறிலங்கா கடற்படையினர் அவர்களால் போடப்படட வேலியையும் பறித்து எறிந்தனர்.
இதனையடுத்து விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்லும் பிரதான வீதியை நேற்று புதன் கிழமை காலை முற்கம்பிகளினால் இடைமறித்து சிறிலங்கா கடற்படையினர் அடைத்துள்ளனர். இதனால் முள்ளிக்களம் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். குறிப்பாக நேற்று காலை பாடசாலை மற்றும் ஏனைய தேவைகளுக்காக முள்ளிக்குளம் சென்ற அனைவரும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
முள்ளிக்குளம் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள், ஆசிரியர்களும் ஏனைய தேவைகளுக்காக சென்றவர்களும் அந்த பாதையூடாக செல்ல முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
சிறிலங்கா கடற்படையினரின் இந்த நடவடிக்கை அவர்களது அராஜகத்தை கடற்படையினர் மீண்டும் அரங்கேற்றியுள்ளதையே வெளிப்படுத்தி நிற்பதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை லோரான்ஸ் லியோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை சிறிலங்கா கடற்படையினரால் நேற்று ஏற்படுத்தப்பட்ட இந்த குழப்பகரமான நிலமை தொடர்பில் முள்ளிக்குளம் பாடசாலையின் அதிபர் ஐ.பீ.சி தமிழுக்கு தெளிவுபடுத்தினார்.
இதேவேளை இதற்கு முன்னரும் கடந்த 21 ஆம் திகதி முள்ளிக்குளம் கிராமத்திற்கு கடற்படை முகாமினூடாக செல்லும் பிரதான வீதியை திடீர் என கடற்படையினர் முற்கம்பிகள் கொண்ட வேலியினால் இடை மறித்து
அடைத்திருந்தனர். எனினும் அப்போது முள்ளிக்குளம் மக்கள் இணைந்து கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்ததுடன், அப்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கத்தின் தலைவர்களுக்கும் அறிவித்திருந்ததை அடுத்து கடற்படையினர் வீதியை மீண்டும் திறந்து விட்டனர்.
இந்த நிலையில் சிறிலங்கா இராணுவம் உள்ளிட்ட அரச படையினரின் ஆதரவு பெற்றவராக கருதப்படும் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக பதவியேற்றுள்ளதை அடுத்து சிறிலங்கா
கடற்படையினர் அவர்களே விடுவித்த முள்ளிக்குளம் கிராமத்திற்கான காணிகளுக்கு செல்லும் பிரதான வீதியை நேற்றுறு காலை முதல் முற்கம்பிகளினால் இடைமறித்து வைத்திருக்கின்றனர்.
அதுவும் டிசெம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னதாக இராணுவம் உள்ளிட்ட அரச படையினர் கையகப்படுத்தி வைத்திருக்கும் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என்று உறுதியளித்திருந்த சிறிலங்கா அரச
தலைவர் மைத்ரிபால சிறிசேன, நேற்று முன்தினம் வடக்கு மற்றும் கிழக்கு ஆளுநர்களை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், காணி விடுவிப்பு தொடர்பான தீர்மானத்தை
நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பணித்திருந்தார்.
இதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கு ஆளுநர்கள் காணி விடுவிப்பதற்கான கூட்டங்களை படை அதிகாரிகளுடனும், அரச அதிகாரிகளுடனும் இணைந்து நடத்திவரும் நிலையிலேயே மன்னார் முள்ளிக்குளம்
கிராமத்தில் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு மக்கள் செல்ல முடியாது கடற்படையினர் வீதியை மறித்திருக்கின்றனர்.
இதேவேளை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தலைமையில் கடந்த 26 ஆம் திகதி மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காணி விடுவிப்பு தொடர்பான கூட்டத்தில் முள்ளிக்குளம் கிராமத்தில் தொடர்ந்தும் விடுவிக்கப்படாது இருக்கும் பொது மக்களின் 23 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு ஸ்ரீலங்கா கடற்படையினர் மேலும் கால அவகாசம் கோரியிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.