சபாநாயகருக்கு பாதுகாப்பு வழங்க வந்த விசேட பொலிஸாரை தாக்கிய மகிந்த தரப்பு ரவுடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ! படங்கள் இணைப்பு

0

இன்று பாராளுமன்ற அமர்வுகள் 1 .30 மணிக்கு ஆரம்பமாக இருந்த நேரம் அங்கு மஹிந்த தரப்பின் உறுப்பினர்கள் பெரும் குழப்பத்தில் ஈடுபட்ட காரணத்தால் சபை நடவடிக்கை ஆரம்பிக்கவில்லை.

அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரின் ஆசனத்தைச் சுற்றிவளைத்து பெரும் பதற்ற நிலையை தோற்றுவித்தனர்.

நேற்றைய தினம் கத்தியுடன் சபைக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெருமாவை கைது செய்யுமாறு பெரும் கூச்சல் போட்ட மஹிந்த தரப்பு தொடர்ந்து கோசம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர்.

சபாநாயகர் கரு ஜயசூரிய பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சபைக்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த போதும் அது பலன் அளிக்கவில்லை.

விசேட பொலிஸ் உத்தியோகத்தர்கள் துணையுடன் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் செங்கோல் கொண்டு வரப்பட்டபோது அவர்கள் மீது தண்ணீர் மற்றும் பல்வேறு பொருட்களை மஹிந்த தரப்பினர் வீசி தாக்குதல் நடத்தினர்.

அதுமட்டுமன்றி சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மிளகாய்தூள் கரைசல் வீச்சு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா, ஜே.வி.பி.யின் ஊடகப் பேச்சாளர் விஜித ஹேரத் ஆகியோர் மீது இந்த மிளகாய் தூள் தாக்குதல் இடம்பெற்றது.

இதன் காரணமாக எதிர்வரும் 19 ஆம் திகதி வரை பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மூன்று நாட்களாக பாராளுமன்றத்தை செயற்பட விடாமல் மஹிந்த தரப்பு அடாவடியில் இறங்கியுள்ளமை நாட்டை பெரும் அச்சுறுத்தலுக்குள் தள்ளியுள்ளது.

இதன்போது பொலிஸாருக்கும், மஹிந்த அணியினருக்கும் இடையில் ஒரு யுத்தமே நடைபெற்றதைப் போன்று இன்றைய நடாளுமன்றம் காணப்பட்டது.

நாட்டின் பிரதான ஜனநாயக அடையாளமாக திகழும் பாராளுமன்றில் இவ்வாறு அடாவடி செய்யும் மஹிந்த தரப்பு மீது அடுத்த கட்டம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட போகிறது என்பது தொடர்பில் பலத்த கேள்விகள் எழுந்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.