நீர்கொழும்பில் வைத்து இளைஞர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் உட்பட மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் கே. ஜி. குணதாச உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு குடாபாடு பிரதேசத்தைச் சேர்ந்த பிரணவன் என்ற இளைஞரே சந்தேக நபர்களினால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரதமராக கடந்த 26 ஆம் திகதி நியமிக்கப்பட்டதை அடுத்து குறித்த நபர் பட்டாசு கொழுத்தி கொண்டாடியுள்ளாார்.
இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முறைப்பாட்டாளரை நீர்கொழும்பு கடற்கரைத் தெருவில் வைத்து கடந்த 26 ஆம் திகதி முதல் தடைவை தாக்கியதாகவும், பின்னர் கடந்த 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீர்கொழும்பு பெரியமுல்லையில் வைத்து சந்தேக நபர்கள் மூவரும் தம்மை தாக்கியதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸ் முறைப்பாட்டை அடுத்து நேற்று வெள்ளிக்கிழமை சந்தேக நபர்கள் மூவரும் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.