ஈபிடிபியின் செயலாளர் நாயகம் டக்கிளஸ் தேவானந்தா அமைச்சரகப்பதவி வகித்த முன்னைய ஆட்சியில் ஈபிடிபியின் பிரதிக்குழுக்களின் தலைவராக இருந்த அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் பயன்படுத்திய, கிளிநொச்சி மாவட்ட அலுவலகமாக விளங்கிய திருநகரில் உள்ள பிரமாண்டமான வீடு ஆட்சி மாற்றத்தின் பின்னர் வீட்டு உரிமையாளரது கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
பின்னர் பொலிசார் இவ்வீட்டினை கையகப்படுத்த முனைந்தபோது வீட்டு உரிமையாளரது சகோதரியால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டு அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஈபிடிபியின் அலுவலகம் திருநகர் ராணுவ முகாமிற்கு அருகில் தற்போது வரை இயங்கி வருகின்றது.
அமைச்சரவை மாற்றத்தின்போது மீண்டும் டக்கிளஸ் தேவானந்தா அமைச்சராகிவிட்டதால் மீளவும் தமக்கிருக்கும் அதிகாரத்தைப்பயன்படுத்தி அவ்வீட்டை கையகப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று மதியம் அமைச்சரது பாதுகாப்புப்பிரிவினர் மற்றும் பொலிசாருடன் வருகைதந்த குறித்த ஈபிடிபி முக்கியஸ்தர்கள் குறித்த வீட்டின் வெளியே நின்று வீட்டைப்பார்வையிட்டு சென்றுள்ளார்கள் வீடு உட்புறமாகப்பூட்டப்பட்டுள்ளது. குறித்த வீட்டின் உரிமையாளர் இந்தியாவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.