மூன்றாவது வெள்ளிக்கிழமை மைத்திரிக்கு பேரிடியாக வீழ்ந்த செய்தி!

0

சிறிலங்காவில் இடம்பெற்றுவரும் சீரற்ற அரசியல் ஸ்திரத்தன்மையின் மத்தியில் மல்வத்து மகாநாயக்க தேரர், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதன்படி, நாட்டில் இடம்பெறும் அரசியல் குழப்ப நிலைமைகளைப் போக்குவதற்கு நாடாளுமன்றத்தினூடாக உடனடித் தீர்வுகாணுமாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் ஏற்பட்டுவரும் குழப்ப நிலைமைகள் நாட்டிற்கு மோசமான விளைவுகளை தேடித்தரும் என்பதால் இதுதொடர்பில் உடனடி முடிவொன்றை ஆராயுமாறு அவர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மல்வத்து மகா நாயக்கரின் மேற்படி கூற்று எந்தளவுக்கு அரசியலில் செல்வாக்குச் செலுத்தும் என்பதை கடந்த கால வரலாறுகள் உணர்த்தி நிற்கின்றன.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டமையையடுத்து நாட்டில் பல்வேறு குழப்ப நிலைமைகள் உருவாகிவருகின்றது.

இந்த நிலையில் இரு தரப்பினரும் மல்வத்து மகா நாயக்க தேரரைச் சந்தித்தபோதிலும் இதுவரை வெளிப்படையான கருத்துகளை மல்வத்து மகாநாயக்க பீடம் வழங்காத நிலை இருந்துவந்தது.

நாடாளுமன்றினூடாக தீர்வுகாணபடவேண்டுமென பெரும்பாலான அரசியற் கட்சிகள் மற்றும் உலக நாடுகள் வலியுறுத்திவந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திடீரென்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

நாடாளுமன்றக் கலைப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றக் கலைப்பிற்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இதன் பின்னர் நேற்றும் நேற்று முன்தினமும் நாடாளுமன்றம் கூடியபோதும் குழப்பத்தின் மத்தியில் முடிவடைந்துள்ளன.

இதனையடுத்து நேற்று மாலை அரசியற் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றில் மீண்டுமொருமுறை நிபந்தனையுடனான பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் அதன்போது நாடாளுமன்றின் தீர்மானத்தை தாம் ஏற்பதாகவும் கூறியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆனாலும் இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவைச் சந்தித்த ஜனாதிபதி நேற்றைய சந்திப்புக் குறித்து விளக்கியிருந்ததுடன் பிரதமர் பதவி தொடர்பிலும் மஹிந்தவுக்கு நம்பிக்கையினை ஏற்படுத்தியதாக தகவல் கசிந்தது.

இந்த நிலையிலேயே மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் மல்வத்து மகா நாயக்க தேரரிடமிருந்து ஜனாதிபதிக்கு மேற்படி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசியலைத் தீர்மானிப்பதில் மல்வத்து பீடம் சூசகப் பங்காற்றிவரும் நிலையில் மகா நாயக்க தேரரின் இந்த கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அதிர்ச்சியான ஒன்றாகவே அமைந்துள்ளது.

இன்னும் சில நிமிடங்களில் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின்பின்னர் இது தொடர்பான நிலைப்பாடுகளை நாம் உணர்ந்துகொள்ளமுடியும்!

Leave A Reply

Your email address will not be published.