25 வயது வரை தற்கொலை செய்யவே எண்ணினேன்! ஆஸ்கார் நாயகனின் சோகம்

0

`என்னுடைய 25வது வயது வரை தற்கொலை எண்ணங்கள் என்னை ஆக்கிரமித்திருந்தன’ என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

“Notes of a Dream: The Authorized Biography of AR Rahman” என்ற புத்தகம் மும்பையில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது வாழ்க்கையில் நடந்த பல்வேறு நிகழ்வுகளைப் பகிர்ந்துகொண்டார். அவர் பேசுகையில்,“இந்த நாடு ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இசையமைப்பாளரின் திறமையை அடையாளம் காணும் முன்பு, வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியைச் சந்தித்துள்ளேன். ஒவ்வொரு நாளும் தற்கொலை செய்துகொள்ள எண்ணினேன். இந்த கடினமான நாட்கள் தான், எதிர்காலத்தில் எதையும் எதிர்கொள்ளும் மனநிலையை உருவாக்கியது. என்னுடைய 25-வது வயது வரை தற்கொலை செய்துகொள்ள எண்ணினேன். என் தந்தையின் இழப்பு இந்த எண்ணத்துக்குக் காரணமாக அமைந்தது. இது ஒருவகையான வெறுமையை என்னுள் தோற்றுவித்தது. இதுவே ஒருவகையில் என்னை அச்சமற்றவனாக மாற்றியது என்று தான் கூற வேண்டும். இறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது. எதுவாயினும் அது உருவாக்கப்படும்போதே, அதன் முடிவு எழுதப்பட்டிருக்கிறது.

அப்படியிருக்கையில் எதற்காக அஞ்ச வேண்டும்?. பஞ்சதன் ரெக்கார்ட் இன் என்ற ரெக்கார்டிங் ஸ்டுடியோவை கட்டியபிறகு தான் திருப்புமுனை ஏற்பட்டது. அதற்கு முன் செயலற்றுதான் இருந்தேன். என் தந்தையின் இழப்பின் காரணமாக என்னால் அதிக படங்கள் பண்ண முடியவில்லை. 35 படங்கள் எனக்குக் கிடைத்த போது, நான் 2 படங்களுக்குத்தான் இசையமைத்தேன். நீ எப்படி இந்த துறையில் பிழைக்கப்போகிறாய் எனப் பலரும் ஆச்சரியப்பட்டுக் கேட்டனர். உன்னிடம் எல்லாம் உள்ளது; அதைப் பற்றிக்கொள் என்றனர். அப்போது எனக்கு 25 வயது. என்னால் எதையும் செய்ய முடியவில்லை. எனது 12 முதல் 22 வயதில் நான் அனைத்தையும் செய்து முடித்திருந்தேன்.

நான், என் உண்மையான பெயரான திலிப் குமார் என்ற பெயரை வெறுத்தேன்; அது எனக்குப் பிடிக்கவில்லை. ஏன் அதை வெறுத்தேன் என்றும் எனக்குத் தெரியவில்லை. வேறொருவனாக மாற ஆசைப்பட்டேன். உங்களுக்குள் நீங்கள் ஆழமாக இறங்க வேண்டும். உங்கள் மனதின் குரலை கேளுங்கள். அது கடினமானது; இருந்தாலும் இதை ஒருமுறைச் செய்துவிட்டால் நம்மையே மறந்துவிடலாம். நான் என்னுள் ஆழமாகச் செல்ல முடியாமல் போகும் சமயங்களில் அதிகாலை 5 அல்லது 6 மணி அல்லது நள்ளிரவுகளில் பணியாற்றுகிறேன். செய்ததையே செய்து கொண்டிருந்தால் சோர்வுதான் ஏற்படும். புதிதாக எதையாவது செய்யவேண்டும். என்னளவில் பயணம் செய்ய வேண்டும்; குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிக்கவேண்டும்; நான் அதை பெரும்பாலான நேரங்களில் அதைச் செய்யவில்லை என்றாலும், அது தான் அழகானது; எனக்கு அது மிகவும் உதவுகிறது” எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.