சிறிலங்கா இராணுவத்துக்கு சீனா கட்டிக் கொடுத்துள்ள பிரமாண்ட அரங்க வளாகம்

0

தியத்தலாவ இராணுவ பயிற்சி அகடமியில் சீனாவின் உதவியுடன் கட்டப்பட்ட பணியக மற்றும் அரங்க வளாகம் சிறிலங்கா அதிபர் மற்றும் சீனத் தூதுவரால், சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது.

நேற்றுமுன்தினம் இந்த நிகழ்வு தியத்தலாவ இராணுவ பயிற்சி அகடமியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சீனத் தூதுவர் செங் ஷியுவான், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, மற்றும் சிறிலங்கா, சீனா இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக மேஜர் ஜெனரல் ஷென் யுன் தலைமையிலான சீன இராணுவத்தின், உயர் அதிகாரிகள் குழுவொன்றும் சிறிலங்காவுக்கு வந்திருந்தது.

இந்த திறப்பு விழாவில் உரையாற்றிய சிறிலங்கா இராணுவ பயிற்சி அகடமியின் தளபதி, பிரிகேடியர் பி.கே. சேனாரத்ன, சீன மக்கள் விடுதலை இராணுவத்துக்கும் சிறிலங்கா இராணுவத்துக்கும் இடையிலான நீண்ட கால இராணுவ உறவுகளை, புதிய கட்டடம் இன்னும் வலுப்படுத்தும் என்று கூறினார்.

சிறிலங்காவின் தேசிய மலரான தாமரையின் வடிவத்தில் இந்தப் புதிய கட்டடத்தை சீன இராணுவ அதிகாரிகள் கட்டிக் கொடுத்துள்ளனர்.

இந்த வளாகத்தில், பயிலுனர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான பணியகம், போதனை மற்றும் அரங்க வசதிகள் உள்ளன.

785 ஆசனங்களைக் கொண்ட அரங்கத்தில், நவீன ஒலி, ஒலி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இங்கு உரையாற்றிய சீனத் தூதுவர் செங் ஷியுவான்,

“இந்த விரிவான பணியக மற்றும் அரங்க கட்டடம், சீன அரசாங்கத்தினால் சிறிலங்காவுக்கு கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளினதுர்ம், இரண்டு இராணுவங்களினதும், நட்புறவுக்கான இன்னொரு அடையாளமாக இது இருக்கும்.சீனாவும் சிறிலங்காவும் நல்ல அண்டைநாடுகள், நல்ல பங்காளர்கள், நல்ல நண்பர்கள்.

அனைத்துலக நிலைமைகளில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்ட போதும், இரண்டு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று தணையாக இருக்கின்றன.

சிறிலங்காவும் சீனாவும் அமைதியை விரும்பும் நாடுகள். இரண்டு நாடுகளின் இராணுவங்களுக்கும் இடையிலான உறவுகள் முக்கியமானது.  இருதரப்பு உறவுகளின் அபிவிருத்திக்கு சாதகமானது.

மலரும் தாமரையும், பசுமையான மலைகளும் சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் நிலையான சகோதரத்துவத்தையும், நட்பையும் சாட்சியாகக் கொண்டுள்ளன.

மூலோபாய பரஸ்பர நம்பிக்கையை அதிகரிக்கவும், அரசியல், பொருளாதார, இராணுவ, கலாச்சார மற்றும் பிற துறைகளில் விரிவான மற்றும் நடைமுறை ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், இரு இராணுவங்களுக்கு இடையே உறவுகளை தொடர்ச்சியாக ஊக்குவிக்கவும், சீனா மற்றும் சிறிலங்காவின் உறுதித்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றுக்கும், இரு நாடுகளின் தலைமைத்துவம் அதிக பங்களிப்பை வழங்கியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

புதிய பணியக மற்றும் அரங்க வளாகம், 7200 சதுர மீற்றர் பரப்பளவு கொண்டது.  2014ஆம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்ட இந்த வளாகம், சீன இராணுவத்தின் இராணுவ விஞ்ஞான அகடமியினால் வடிவமைக்கப்பட்டு, கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

China-aided-office-and-auditorium-comple
China-aided-office-and-auditorium-comple
China-aided-office-and-auditorium-comple
China-aided-office-and-auditorium-comple

Leave A Reply

Your email address will not be published.