TNA ஆதரவுடன் ரணிலுக்கு கிடைத்த வெற்றி!

0

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை 117 பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதமருக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை தமக்கு ஏற்புடையதல்ல என பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்ததற்கு அமைய மக்கள் விடுதலை முன்னணி குறித்த வாக்கெடுப்பில் கலந்துக் கொள்ளவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை சமர்ப்பிப்பு (2ஆம் இணைப்பு)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவான நம்பிக்கை பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று கூடியபோது, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இப்பிரேரணையை சமர்ப்பித்தார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் என்ற ரீதியில் செயற்படுவதற்கு நாடாளுமன்றில் உயர் மட்டத்தில் தகுதி இருப்பதாக அறிவிக்கப்பட்டு இப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பிரேரணையை ஏற்றுக்கொண்ட சபாநாயகர் அதனை விவாதத்திற்கு விட்டுள்ளதுடன் அவ்விடயம் தொடர்பில் வாக்கெடுப்பையும் நடத்தவுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வினையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியன புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு  நாடாளுமன்றத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்தியும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும் இரு பிரேரணைகள் நாடாளுமன்றத்தில்  முன்வைக்கப்படவுள்ளன

நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) பிற்பகல்  1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது.

இதன்போது ஐக்கிய தேசிய முன்னணியினரால் இவ்விரு பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டு பின்னர் அவ்விடயம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க  குறிப்பிட்டுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இரு பிரேரணைகளும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்படவுள்ளதாகவும் ஐ.தே.க.வில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கமாட்டோமென மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.