ஈழத்தில் பறந்தது! “செய் அல்லது செத்துமடி” முதல் பெண் கரும்புலி அங்கயற்கண்ணி படகு!!

0


செய் அல்லது செத்துமடி

இலங்கையின் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத ‘பட்ட திருவிழா’ நடைபெறுவது வழக்கம்.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இந்த ராட்சத பட்டத் திருவிழா இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் எங்குமில்லாதவாறு ராட்சத பட்டங்களை பறக்கவிடுவது இந்த பட்டத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும்.

இந்த ஆண்டு (2019 பொங்கல்) பட்டத் திருவிழாவில் பார்வையாளர்களின் கண்ணைக்கவரும் விதமாக முப்பரிமான தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன.

பட்டத் திருவிழாவினை காண யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலிருந்தும் ஆண்டு தோறும் பெருமளவிலான மக்கள் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் ஒன்றுகூடுகின்றார்கள்.

பட்ட திருவிழா

இம்முறை பட்டத் திருவிழாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் சீருடைக்கு ஒத்த நிறத்தில் உள்ள தரை மற்றும் கடலில் தாக்குதல் நடத்த கூடியவாறான போர் டாங்கி மற்றும் படகு அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டங்களும் வானில் பறக்கவிடப்பட்டன.

“செய் அல்லது செத்துமடி” எனும் வாசகத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முதல் பெண் கரும்புலியான அங்கயற்கண்ணி பெயர் பொறிக்கப்பட்ட படகு பட்டம் பறக்கவிடப்பட்டது. இந்த பட்டம் வானில் பறந்தபோது பலரும் கரகோஷம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊர் வல்வெட்டித்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.