தனி ஈழம் அமையவேண்டுமென விரும்பிய ஜார்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்!

0

முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடல்நலக்குறைவின் காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88.

கர்நாடக மாநிலம், மங்களூரில் பிறந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். சமதா கட்சியின் நிறுவனரான இவர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத்துறை மந்திரியாக பணியாற்றியவர். இவரது பதவிக்காலத்திலேயே கார்கில் போர் நடந்தது. போக்ரான் அணு ஆயுத சோதனை நடத்த வேண்டும் என்று வெளிப்படையாக ஆதரித்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்.

மேலும், வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் ரயில்வே மந்திரியாகவும், மொரார்ஜி தேசாய் அமைச்சரவையிலும் அமைச்சராகவும் பணியாற்றிய ஜார்ஜ், இறுதியாக 2009 ஆகஸ்ட் முதல் 2010 ஜூலை மாதம் வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர் ஆவார்.

கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஜார்ஜ் பெர்னாண்டஸ். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் மறைவிற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த போதுதான் கார்கில் போர் நடந்தது என்பதும், தமிழர்களுக்காக தனி ஈழம் அமைய வேண்டும் என்று பேசி நாட்டையே திரும்பி பார்க்க வைத்தவர்தான் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தமிழர் வரலாற்றில் அழியாத புகழ் விளக்கு – ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு வைகோ இரங்கல்.!

முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் (88) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தேர்ந்த தொழிற்சங்கவாதியாகவும், நெருக்கடி நிலை பிரகடனத்தை மூர்க்கமாக எதிர்த்த ஜனநாயகவாதியாகவும் அறியப்படுகிற ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்திய நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க, தொழிலாளர்களைக் காக்க தன் வாழ்வையே அர்ப்பணித்த மாபெரும் புரட்சியாளர்தான் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆவார். லட்சோப லட்சம் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்றவராக மராட்டிய மாநிலத்தில் அவர்களின் உரிமையைக் காக்க போராடி வென்றார்.

1977ல் நாடாளுமன்றத் தேர்தலில் பிஹார் மாநிலத்தில் மிசாபூர் தொகுதியில் மூன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அமைச்சர் பதவியை ஏற்க மறுத்தார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கட்டாயப்படுத்தியதால் அமைச்சரானார். நெருக்கடி நிலை காலத்தில் அவர் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபோது, 1975 இல் முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி பெர்னாண்டஸ் தலைமறைவாக இருப்பதற்கு பெரிதும் உதவினார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் இல்லம் திபெத் அகதிகளுக்கு புகலிடமாயிற்று.

1978 முதல் அவர் உயிர் நண்பனானேன். பின்னர் உடன் பிறவாத தம்பியாகவே என் மீது பாசம் கொண்டார். விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் ஈழத்துக்கும் அவர் செய்த உதவிகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. எண்ணில் அடங்காதவை.பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் ஈழத் தமிழர்களுக்கு, குறிப்பாக புலிகளுக்கு அவர் கவசமாகத் திகழ்ந்து செய்த உதவிகளை எண்ணும்போதே என் கண்களில் கண்ணீர் வடிகிறது. 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் என் இல்லத்தில் மூன்று நாள் தங்கியிருந்தார். நான் பொடா கைதியாக வேலூர் மத்திய சிறையில் இருந்தபோது, டெல்லியிலிருந்து வந்து மூன்று முறை என்னை சிறையில் சந்தித்தார்.

விடுதலைப் புலிகளுக்குச் சென்ற கப்பலை சர்வதேச கடலில் இந்தியக் கடற்படை தடுக்க முயன்றதை பெர்னாண்டஸ் கவனத்துக்குக் கொண்டு சென்ற உடன் அவரும், பிரதமர் வாஜ்பாயும் அதன்பின் அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுத்தனர்.ஈழத்தமிழர் இனப்படுகொலையைத் தடுக்க 2009 இல் இதே நாளான ஜனவரி 29 இல் முத்துக்குமார் தீக்குளித்து மடிந்த அதே நாளில் என் உடன்பிறவாத அண்ணன், நான் உயிரினும் மேலாக நேசித்த அண்ணன் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைந்தார் என்ற செய்தி அறிந்து நிலைகுலைந்துபோனேன்.

ஈழத்தமிழர் வரலாற்றிலும், இந்திய ஜனநாயக வரலாற்றிலும் அழியாத புகழ் ஒளியாக ஜார்ஜ் பெர்னாண்டஸ் நிலைத்து இருப்பார்.அவரது துணைவியாருக்கும், புதல்வருக்கும், உற்றார் உறவினருக்கும், அவரை நேசிக்கும் லட்சோப லட்சம் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஈழத் தமிழர்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலியை, வீரவணக்கத்தைத் தெரிவிக்கிறேன்” என கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.