தோனி ஒரு ‘சூப்பர் ஸ்டார்’: கோலி

0

இந்திய கிரிக்கெட்டுக்கு தோனியை விடவும் அர்ப்பணிப்புள்ள கிரிக்கெட் வீரர் இல்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 தொடரை சமன் செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரையும், ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. ஒரு நாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் அரை சதம் அடித்த தோனி தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தன் மீதான விமர்சனங்களைத் தனது ஆட்டத்தின் மூலமே ஒரு விளையாட்டு வீரர் சரி செய்ய முடியும். தோனியும் அதை தற்போது நிகழ்த்திக் காட்டியுள்ளார்.

ஹெலிகாப்டர் ஷாட்களை பறக்கவிடும் தோனியாக அதிரடியில் இறங்கவில்லை என்றாலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறார்.

மூன்றாவது போட்டியில் பரபரப்பான கட்டத்தில் வெற்றியை இந்திய அணி ருசித்தது. வெற்றி குறித்து இந்திய அணியின் கேப்டன் கோலி பேசும் போது, “மெல்போர்ன் பேட் செய்ய எளிதான பிட்ச் அல்ல. ஆட்டத்தைக் கடைசி வரை கொண்டு செல்ல வேண்டும். நிலைத்து நின்ற இரண்டு பேட்ஸ்மென்களும் அங்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். கடைசியில் வேலையைத் திறம்பட முடித்தார்கள். சஹல் மிக அழகாகப் பந்துவீசினார். இந்தத் தொடர் அபாரமாக அமைந்தது, நீண்ட நாட்களாக இங்கு தான் இருக்கிறோம். டி20 தொடரைச் சமன் செய்தோம், டெஸ்ட், ஒருநாள் தொடர்களை வென்றுள்ளோம்” என்று கூறினார்.

தோனி ஃபார்முக்கு திரும்பியது தொடர்பாக பேசிய கோலி, “ஒரு அணியாக தோனி குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவர் ரன்களை எடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது, ஏனெனில் ரன்கள் எடுத்தால்தான் அவரது ரிதம், நம்பிக்கையை மீண்டும் அவரால் பெற முடியும். 3 ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் எடுத்து வெற்றிக்கு இட்டுச் சென்றது, நியூஸிலாந்திலும் இந்தியாவிலும் அவர் இந்த பார்மை முன்னெடுத்துச் செல்வார் என்று தோன்றுகிறது. அவருக்கே ஒரு பேட்ஸ்மெனாக தன் ரிதம் மீண்டும் கிடைத்தது குறித்து நம்பிக்கையாக இருக்கும். அவர் ரன்கள் தொடர்ச்சியாக எடுக்கிறார் என்பது அணிக்கு மகிழ்ச்சி. அதைவிடவும் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய கோலி, “தோனி ஒரு சூப்பர் ஸ்டார். வெளியே என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம், ஒரு தனிநபராக அவரைப் பற்றி நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால் இந்திய கிரிக்கெட்டுக்கு தோனியை விடவும் அர்ப்பணிப்புள்ள கிரிக்கெட் வீரர் இல்லை. ஆகவே அவருக்கான இடத்தை வழங்க வேண்டும், ஏனெனில் அவர் நாட்டிற்காக நிறையப் பங்களித்துள்ளார். ஆகவே அவர் தன் ஆட்டம் குறித்து அவரே வடிவமைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர் புத்திசாலி கிரிக்கெட்டர், என்ன தேவை என்பதை அவர் அறிந்தே வைத்துள்ளார். ஒரு அணியாக நாங்கள் ஒட்டுமொத்தமாக அவர் அணிக்காகச் செய்யும் பங்களிப்பில் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.