பேட்ட – விஸ்வாசம்: 100 கோடி எனும் பொய்!

0

சினிமா என்ற காட்சி ஊடகம் கற்பனையும், மிகைப்படுத்தலும், சாத்தியமில்லாத சம்பவங்களின் தொகுப்புகளையும் கொண்டது. சில படங்கள் ரசிகனைச் சிரிக்க வைக்கும், சில படங்கள் சிந்திக்கத் தூண்டும், பல படங்கள் கோபத்தைத் தூண்டும்.

இவை அனைத்தையும் ரசிகனிடம்ஒருங்கிணைக்கும் வேலையை விஸ்வாசம் – பேட்ட படக்குழுவினர் கடந்த சில நாட்களாக அவர்கள் வெளியிடும் செய்திகள் மூலம் செய்து வருகின்றனர்.

அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து, பிரியாணி பொட்டலம் தந்து தொண்டனை கோஷம் போட வைக்கின்றன. அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன விஸ்வாசம் – பேட்ட படங்களின் தயாரிப்பு நிறுவனமும், விநியோகஸ்தர்களும்.

அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துக்கு வலு சேர்க்க சில கட்சிகளின் தலைவர்களை தங்கள் ஊதுகுழலாக மீடியாவிடம் பேச வைப்பது வாடிக்கை. அது போன்று சினிமாவில் ரஜினிகாந்த் படத்தின் வசூலை மிகைப்படுத்திக் கூறும் ஊதுகுழலாக திருப்பூர் சுப்பிரமணி பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

இதனையொட்டி வரும் பொய்யான பரபரப்புச் செய்திகளை தங்களின் செய்தி பசிக்கு பயன்படுத்திக் கொள்ளும் செயலை அனைத்து ஊடகங்களும் செய்து வருகின்றன.

பேட்ட படம் 11 நாட்களில் 100 கோடி ரூபாயை வசூல் செய்யும் என்று திருப்பூர் சுப்பிரமணி ஊடகங்களிடம் தெரிவித்தார். இதனையே 100 கோடி வசூல் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தால் சர்ச்சையும், விமர்சனங்களும் எழுந்திருக்காது, அச்சந்திப்பில் விஸ்வாசம் படத்தின் வசூல் பற்றியும் சுப்பிரமணி கூறியதை எடிட் செய்து விட்டு தங்களுக்கு சாதகமான பகுதியை பேட்ட படக்குழு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது.

தமிழகத்தில் பேட்ட படத்தின் வசூலைக் காட்டிலும் அதிகம் வசூல் செய்திருக்கும் விஸ்வாசம் படத்தின் தமிழக விநியோகஸ்தர் கேஜேஆர் ஸ்டுடியோ, ‘எட்டு நாட்களில் தமிழகத்தில் 125 கோடி ரூபாய் வசூல்’ என்றொரு பதிவை வெளியிட்டு தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டதுடன் இல்லாமல் திரையுலக வணிக வட்டாரங்களை கோபப்பட வைத்திருக்கிறது.

தமிழகத்தில் எந்த ஒரு படமும் எட்டு நாட்களில் 125 கோடி ரூபாயை வசூல் செய்யக் கூடிய சாத்தியம் இல்லை. இன்று வரை தமிழகத் திரையரங்குகளில் திரையிடப்பட்டு அதிக வருவாயை ஈட்டியது பாகு பலி – 2 என்ற மொழி மாற்று படம் தான். இப்படத்தின் சாதனை இதுவரை தமிழ் படங்களால் சமன் செய்யப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

விஸ்வாசம் எவ்வளவு தான் முதல் வாரத்தில் மொத்த வசூல் செய்தது என்று அப்படத்தின் விநியோகஸ்கள் தரப்பில் கேட்ட போது பின்வரும் தகவல்கள் கிடைத்தன.

சென்னை, செங்கல்பட்டு, திருச்சி ஏரியாக்களில் பேட்ட படம் அதிக திரையரங்குகள், அதிகமான காட்சிகள் திரையிடப்பட்டதால் வசூல் அதிகம். அதே நேரம் இந்தப் பகுதிகளில் விஸ்வாசம் படம் அதிகளவு அதிகாலை காட்சி திரையிடப்பட்டுள்ளது. பேட்ட படத்திற்கு அந்த வாய்ப்பு அமையவில்லை. விஸ்வசம் படத்தின் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு வாங்குவதற்கு அஜித் ரசிகர்கள் ஆர்வம் காட்டியதால் குறைவான திரையரங்கு என்றாலும் முதல் நாள் வசூல் அதிகரித்தது. பேட்ட படத்தின் வசூல் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது.

கோவை ஏரியாவில் இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் ஒதுக்கீடு செய்ய விநியோகஸ்தர் முயற்சித்தார். தியேட்டர் உரிமையாளர்கள் விஸ்வாசம் படத்தை திரையிட அதிக ஆர்வம் காட்டியதால் அதற்கு பேட்ட படத்தை காட்டிலும் 10% திரைகள் அதிகம் கிடைத்தது. ரிலீஸ் அன்று தமிழகத்தில் அதிக விலைக்கு விஸ்வாசம் பட டிக்கட்டுகள் விற்பனையானதில் முதலிடத்தில் கோவை ஏரியா உள்ளது. அதனால் இங்கும் வசூலில் விஸ்வாசம் முதலிடம் வகித்து வருகிறது. இந்த பகுதியில் வசூலில் பல்வேறு சாதனைகளை விஸ்வாசம் நிகழ்த்தியிருக்கிறது.

திருப்பூரில் ஒரு திரையரங்கில் சர்கார் படம் நான்கு வாரங்களில் 17 லட்சம் ரூபாய் நிகர வசூல் செய்தது. அதே திரையரங்கில் விஸ்வாசம் எட்டு நாட்களில் 26 லட்ச ரூபாய் நிகர வசூலாக கடந்து சாதனை நிகழ்த்தியுள்ளது. இது போன்று பல திரையரங்குகளில் விஸ்வாசம் சாதனை நிகழ்த்தியதற்குப் பிரதான காரணம் கட்டுப்பாடில்லாத தியேட்டர் கட்டணமும், வெறி கொண்ட அஜித் ரசிகர்களும் தான்.

வட – தென்னாற்காடு பகுதிகளில் இயல்பாகவே அஜித் ரசிகர்கள் அதிகம். அதே போல் விஸ்வாசம் படத்தின் விநியோகஸ்தர்களின் கட்டுப்பாட்டில் 70% திரைகள் இருப்பதால் இங்கும் அதிக திரைகளில் அஜித் படம் திரையிடப்பட்டது, வசூலும் அபரிமிதமாக இருந்ததால் விஸ்வாசம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சேலம் ஏரியாவில் 63 திரைகளில் விஸ்வாசம் 52 திரைகளில் பேட்ட திரையிடப்பட்டதால் இங்கும் வசூலில் விஸ்வாசம் முந்தி கொண்டதால் ஏழு நாட்களில் 6.78 கோடி ரூபாயை மொத்த வசூல் செய்திருக்கிறது. பேட்ட ஐந்து கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது.

மதுரை ஏரியாவில் அதிக திரைகளை ஆக்கிரமித்த விஸ்வாசம், சிறப்புக் காட்சிகள், ரசிகர் மன்ற காட்சிகள் என திரையிடப்பட்டு 11.68 கோடி ரூபாயை முதல் வார முடிவில் வசூலாக குவித்திருக்கிறது. பேட்ட சுமார் 7.28 கோடி ரூபாய் மொத்த வசூலாக பெற்றது.

திருச்சி விநியோக பகுதியில் நகர்ப்புறங்களில் உள்ள முக்கியமான திரைகளில் பேட்ட திரையிடப்பட்டது. அதை விடச் சற்று குறைவான திரைகளில் திரையிடப்பட்ட விஸ்வாசம் முதல் வார முடிவில் 6கோடியே 18 லட்சம் ரூபாயை மொத்த வசூல் செய்திருக்கிறது. பேட்ட 5 கோடியே 26 லட்சத்தை மொத்த வசூலாகக் குவித்திருக்கிறது.

ஆக மொத்தத்தில் முதல் வார முடிவில் இரண்டு படங்களுமே ஆச்சர்யப்படத்தக்க, எதிர்பாராத மொத்த வசூலை கடந்திருக்கிறது. இரண்டு படத்தையும் குடும்பங்கள் கூட்டமாக வந்து பார்த்த அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.

ஐம்பது வயதை நெருங்கும் அஜித் குமாருக்கு அவரது திரையுலகப் பயணத்தில் முதல் வாரத்தில் மொத்த வசூல் ஐம்பது கோடியை கடந்து சாதனை நிகழ்த்திய படமாக விஸ்வாசம் வெற்றிக் கொடியை பறக்க விட்டிருக்கிறது.

மூன்றாம் தலைமுறை நடிகரின் படத்துடன் போட்டி போட்டாலும் ரஜினி படத்தின் வசூல் எப்போதும் போல் இருப்பதை மறுக்க முடியாது. பேட்ட படமும் முதல் வார முடிவில் ஐம்பது கோடி மொத்த வசூலைக் கடந்திருக்கிறது.

விஸ்வாசம் முதல் வார முடிவில் சுமார் 85 கோடி ரூபாயை மொத்த வசூலாகப் பெற்றுள்ளது. பேட்ட சுமார் 58 கோடியை மொத்த வசூலாகக் குவித்திருக்கிறது. இந்த வசூலுக்குக் காரணம் வெறித்தனமான ரசிகர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்தி சட்டத்துக்கும், தர்மத்துக்கும் புறம்பாக அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதே என்பதைப் பதிவு செய்கிறோம். இது மாதிரியான சூழல், வசூல் இவர்கள் நடித்து வரும் அடுத்த படங்களுக்கு அமைந்து வசூலைக் குவிக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்பதை சம்பந்தப்பட்ட நடிகர்கள் புரிந்து கொண்டு சம்பளத்தை உயர்த்தாமல் இருப்பது தமிழ் சினிமாவிற்கு நல்லது. விநியோகஸ்தர்களும், திரையரங்குகளும் இவ் வசூலை அளவு கோலாக வைத்து படங்களை வாங்க முயற்சிப்பதும் ஆரோக்கியமானதல்ல.

தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் முடிந்தால் உண்மையான வசூலைக் கூறுங்கள் இல்லை என்றால் மெளனம் காத்திடுங்கள். முழுப் பூசணிக் காயைச் சோற்றில் மறைக்கும் மோடி மஸ்தான் வேலையைச் செய்ய வேண்டாம் என்பதே திரையுலக நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பு.

Leave A Reply

Your email address will not be published.